Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஊர்ஊராய் சுற்றுப்பயணம் செல்லும் இலைக்கட்சி தலைவரின் தந்திரம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘பிரதமரின் நெஞ்சுக்கு நெருக்கமானவரா இருப்பவருக்கு உயர் பதவி கிடைக்கப் போறதா அவரது ஆதரவாளர்கள் பேசிக்கிறாங்களே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘பதவி விலகியே ஆக வேண்டும் என்ற நெருக்கடி வந்தவுடன், எந்தவித முன்அனுமதியுமின்றி ஜனாதிபதியை பார்த்து ரிசைன் லட்டர் கொடுத்ததுடன், தனது எக்ஸ் தளத்தில் ராஜினாமாவை அறிவித்து, கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துட்டாராம் துணை ஜனாதிபதி.. இதனால் ஷாக்காகி போனது கட்சியின் தலைமைதானாம்.. இந்த இடத்திற்கான பட்டியலில் திருப்பூர் தமிழரான சிபிஆர் பெயரும் இடம்பெற்றிருக்காம்.. ஜார்க்கண்ட் கவர்னராக இருந்த அவர் தற்போது மகாராஷ்டிரா கவர்னராக இருக்கிறார்.. கடந்த மூன்று நாட்களாக அவர் டெல்லியில் முகாமிட்டிருக்காராம்.. அவருக்கு துணை ஜனாதிபதி பதவி கிடைக்கும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் ரொம்பவே உறுதியாக இருக்காங்களாம்.. 1999ம் ஆண்டு கோவை தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், மந்திரி பதவி கிடைக்கும் என ஆவலாக இருந்தாராம்.. மந்திரிகளின் பெயரை படிக்கும்போது, அவர் பெயரை கொண்ட இன்னொருவர் எழுந்து பதவியேற்க சென்றதாக அவரது கட்சிக்காரங்க இன்னும் சொல்லிக்கிட்டே இருக்காங்க.. இக்காட்சியை பார்த்ததும் வாஜ்பாய் ஷாக்காயிட்டாராம்.. சிபிஆரைத்தானே சொன்னேன் என்பது போன்ற அவரது ரியாக்‌ஷன் இருந்துச்சாம்.. என்றாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தவர் தான் இந்த சிபிஆர் என்று, ஒரு புதிய தகவலை பரப்பிக்கிட்டே தங்களது மனதை தேற்றிக்கிட்டு இருக்காங்களாம் ஆதரவாளர்கள்.. அந்த ஏமாற்றத்துக்கு இந்த துணை ஜனாதிபதி பதவி கிடைத்தே ஆகுமுன்னு அவரது அடிபொடிகள் சொல்றாங்க.. கவர்னராக இருந்தாலும் பிரதமரின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருக்காராம்.. முடிந்துபோன நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எப்படியும் 20 இடத்தை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தாராம் பிரதமர்.. அந்த நம்பிக்கையை கொடுத்தவர் மாஜி போலீஸ்காரராம்.. ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாதுன்னு சொன்னதோடு, ஆட்சியை பிடிக்கும் வழிமுறைகளை சொல்லிகொடுத்தாராம் இந்த சிபிஆர்.. இதனால் அவருக்கு பதவி கிடைப்பது உறுதி என்றும் சொல்றாங்க.. அதே நேரத்தில் தனது பதவி பறிப்புக்கு பின்னாடி யாரெல்லாம் இருக்காங்க என்ற தகவல் வெளியாகிக்கிட்டே இருக்கும் நேரத்தில் டெல்லி தலைமையை நினைத்து ரொம்பவே ஷாக்குல இருக்காராம் மாஜி போலீஸ்காரர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குக்கர்காரர் பேச்சால் அல்வா, முத்து மாவட்ட இலைக்கட்சியினர் கொதித்து போய் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘குக்கர்காரர் 2026ல் அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் கூட்டணி ஆட்சிதான் அமையும் என வாய்ஸ் கொடுத்திருக்கார்.. அவரது பேச்சால் அல்வா, முத்து மாவட்ட இலை கட்சியினர் கொதித்துப் போய் இருக்காங்களாம்.. மம்மி இருந்தால் இப்படி கூட்டணி ஆட்சி என கூறுவாரா? இப்போது மட்டும் ஏளனம் பேசுகிறராரே என தங்களது ஆதங்கத்தை இலை கட்சியினர் கொட்டித் தீர்த்து வருகின்றனராம்.. இலை கட்சி, மலராத தேசிய கட்சியுடன் தான் கூட்டணி அமைச்சிருக்கு... அந்த கூட்டணியில் குக்கர்காரருக்கு இடம் உண்டா என்பது கூட இன்னும் முடிவாகவில்லை. ஆனாலும் கூட்டணி ஆட்சி தான் என்று குரல் கொடுக்கிறார். வெளியில் இருந்தே இப்படி குரல் கொடுப்பவர், நாளை கூட்டணியில் இணைந்தால் எப்படி பேசுவார் என சேலம்காரரின் நெருக்கமானவர்களிடம் இலை கட்சியினர் தங்களது கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளனர். ஏற்கனவே தேனிக்காரரை சேலம்காரர் நெருங்க விடாமல் துரத்திய நிலையில் குக்கர்காரரின் நையாண்டியால் தென் மாவட்ட இலை கட்சியினர் தகித்துப் போய் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதிமுகவை முற்றிலும் கைப்பற்றவும், கூட்டணி ஆட்சி என்ற மலராத கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவும் போட்ட திட்டம்தான் இலைக்கட்சி தலைவரின் சுற்றுப்பயணமாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவர் மெகா திட்டத்துடன் தான் ஊர் ஊராய் சுற்றி வருவதாக அவரது குணத்தை நன்கறிபவர்கள் உடைத்து சொல்றாங்க.. டெல்லியில் இருந்து வேகமாக வந்த உள்துறை மந்திரி, இலைக்கட்சி தலைவரை கூட்டணி சேர்ந்தே ஆகவேண்டும் என மிரட்டி சேர வச்ச விவகாரம் ஊருக்கே தெரியும்.. இதனை மறுப்பேதும் சொல்லாம உடனே ஏற்றுக்கொண்ட இலைக்கட்சி தலைவர், நான் யார் என்பதை போகப்போக காட்டுகிறேன் என்ற திட்டத்துடன் இருக்காராம்.. அதோடு கூட்டணி மந்திரி சபை என அவர்கள் கொடுக்கும் குடைச்சல் பெருசா இருக்காம்.. ஜெயிப்பது என்பது முடியாத காரியம் என்றாலும், கூட்டணி மந்திரி சபை என்ற வார்த்தையை கேட்கவே அவருக்கு எரிச்சலாக இருக்குதாம்.. இதனால் மலராத கட்சிக்கு ஒரு நெருக்கடியை கொடுக்க போட்ட திட்டம் தான் ஊர் ஊராய் செல்வதாம்.. மம்மிபோல போகும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமென வருகிறார்கள் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திக்கிட்டு வர்றாராம்.. இதற்காக எவ்வளவு துட்டு செலவானாலும் பரவாயில்லை.. தனக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை டெல்லிக்கு உணர்த்ததானாம்.. அதோடு அதிமுகவை முற்றிலும் கைப்பற்றுவதற்காகத்தான் இந்த பதுங்கல் என அவரை நன்கு தெரிந்தவர்கள் சொல்றாங்க... அதோடு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அவ்வூரில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்காக பல்வேறு வேடங்களை போட்டு இலைக்கட்சி தலைவரை கவர்ந்து இழுக்காங்களாம்.. மாட்டு வண்டியில் ஏற்றிச்செல்வது போன்ற நாடகத்தை அரங்கேற்றிக்கிட்டு இருக்காங்களாம்..

அதே நேரத்தில் குட்கா வழக்கில் சிக்கியிருக்கும் மாஜி மந்திரி ஒருவர் இலைக்கட்சி தலைவரை மேடையில் அமரவச்சி, ‘அய்யாதுரை நீ பல்லாண்டு வாழணும்..’ என்ற பாடலை குழந்தைகளை வச்சி பாட வச்சாராம்.. இதில் நெகிழ்ந்துபோனாராம் இலைக்கட்சி தலைவர்.. இக்காட்சியை பார்த்த தேனிக்காரரின் அடிபொடிகள், இது நகைச்சுவையின் உச்சமென சிரிக்கிறாங்களாம்.. அதுவும் அந்தந்த மாவட்டத்தில் தங்களுக்கிருக்கும் செல்வாக்கு என்ன என்பதை இலைக்கட்சி தலைவருக்கு உணர்த்தவும் இவ்வாறு மா.செ.க்கள் செய்வதாகவும் சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.