4 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை கேரளா வருகை: சபரிமலையில் நாளை தரிசனம் செய்கிறார்
திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று மாலை திருவனந்தபுரம் வருகிறார். நாளை சபரிமலையில் தரிசனம் செய்து விட்டு, திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு கேரளாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி இன்று மாலை 6.20 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.
அவருக்கு விமான நிலையத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், இரவு கவர்னர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை 9.35 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலைக்கு செல்கிறார். 10.20 மணியளவில் நிலக்கல்லில் இறங்கி, கார் மூலம் பம்பை செல்கிறார். அங்கிருந்து ஜீப் மூலம் சன்னிதானம் செல்கிறார்.
அவருடன் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், அவரது மனைவி, கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் ஆகியோர் மட்டுமே இருப்பார்கள். மதியம் 12.20 மணி முதல் 1 மணி வரை சபரிமலையில் தரிசனம் செய்கிறார். அப்போது சன்னிதானத்தில் சபரிமலை கோயில் தந்திரி, மேல்சாந்தி, தேவசம் போர்டு தலைவர் உள்பட 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பின்னர் மதிய உணவுக்கு பின்னர் நிலக்கல் திரும்புகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் இரவு திருவனந்தபுரம் ஹயாட் ஓட்டலில் ஜனாதிபதிக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் இரவு விருந்து அளிக்கிறார். 23ம் தேதி காலை 10.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் முழு உருவ சிலையை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்.
பிறகு திருவனந்தபுரம் அருகே சிவகிரியில் நடக்கும் ஸ்ரீ நாராயண குரு மகா சமாதி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அவர் கோட்டயம் மாவட்டம் பாலா செயின்ட் தாமஸ் கல்லூரி பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவு ஜனாதிபதி குமரகத்தில் தங்குகிறார். 24ம் தேதி எர்ணாகுளம் செயின்ட் தெரசா கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கொச்சியிலிருந்து டெல்லி திரும்புகிறார்.
* 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் இன்று 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. நாளை ஜனாதிபதி தரிசனம் முடிந்து திரும்பும் வரை பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு திருவனந்தபுரம், சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..