சென்னை: முழு சந்திர கிரகணம் நேற்று இரவு நிகழ்ந்தது. இந்த நிகழ்வை இந்தியா முழுவதும் பொது மக்கள் கண்டு களித்தனர். சந்திர கிரகணம், மற்றும் சூரிய கிரகணம் போன்ற கிரகணங்கள் ஆண்டில் ஒன்றிரண்டு முறை நடப்பது வழக்கம். இதுபோன்ற சந்திர கிரகண நாளில் பல மூடப்பழக்கம் கொண்ட செய்திகளை பரவவிடுவதும், அதை பொதுமக்கள் உண்மை என்று நம்பி அதை கடைபிடிப்பதுமாக இருக்கிறார்கள். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரகூடாது, வெறும் கண்களால் சந்திர கிரகணத்தை பார்க்கக் கூடாது, கோயில் நடை சாத்துவது, கோயிலை தூய்மை செய்வது, அந்த நேரத்தில் உணவு அருந்தக் கூடாது என்று பல்வேறு செயல்களை செய்கின்றனர். சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் ஏற்படும் இயற்கை நிகழ்வு. சூரிய ஒளி படுவதால் தான் நிலவு நம் கண்ணுக்கு தெரிகிறது.
பூமி அந்த ஒளியை மறைப்பதால் சந்திரன் மீது நிழல் விழுகிறது. இதில் பூமியின் நிழல் இரண்டு பகுதிகளைக் கொண்டது. மங்கலான புறநிழல் மற்றும் இருண்ட கருநிழல், சந்திரன் பூமியின் கருநிழலில் நுழையத் தொடங்கும் போது சந்திரன் மறையத் தொடங்கும். முழுமையாக நுழையும் போது முழு கிரகணம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் சந்திரன் ஆழ்ந்த சிவப்பு அல்லது செம்பு நிறமாக மாறி ‘இரத்த நிலா’ எனக் காட்சிதருகிறது. மேற்கண்ட இந்த நிகழ்வுதான், செப்டம்பர் 7ம் தேதியான நேற்று இரவில் வானில் நிகழ்ந்தது. நேற்று இரவு 8.58 மணிக்கு சந்திரன் பூமியின் புறநிழலில் நுழைந்தது. இரவு 9.57 மணிக்கு சந்திரன் பூமியின் கருநிழலில் நுழைந்து, பகுதி சந்திரக் கிரகணம் தொடங்குகிறது. இது அன்று அதிகாலை 1.26 மணி அளவில் கிரகணம் முடிந்து சந்திரன் கருநிழலை விட்டு வெளியேறியது. அதிகாலை 2.25 மணிக்கு சந்திரன் புறநிழலைவிட்டு முழுமையாக வெளியேறியது.
இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்து இல்லை என்று அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அறிவியல் ரீதியாக இவை மனிதர்கள், விலங்குகள், அல்லது தாரவங்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. சந்திர கிரகணத்தின்போது எந்த பயமும் தேவையில்லை. அதனால் நேற்றைய சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். அதற்காக அரசு தரப்பிலும், தனியார் அமைப்புகளும் தமிழகத்தில் பல இடங்களில் ஏற்பாடுகள் செய்திருந்தனர். சென்னையில் கோட்டூர்புரத்தில் உள்ள கோளரங்கில் பொதுமக்கள் குழுக்களாக சந்திர கிரகணத்தை காணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிக அளவில் பொதுமக்கள் அங்கு வந்து தொலைநோக்கி மூலம் கண்டு களித்தனர். இந்த சந்திர கிரகணம் குறித்த அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய வானியற்பியல் நிறுவனம், கணித அறிவியல் நிறுவனம் ஆகிய இணைந்து பயிற்சிப் பட்டறைகள், சுவரொட்டிகள், மற்றும் பொது நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தன.
* சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் ஏற்படும் இயற்கை நிகழ்வு.
* நேற்று இரவு 8.58 மணிக்கு சந்திரன் பூமியின் புறநிழலில் நுழைந்தது. இரவு 9.57 மணிக்கு சந்திரன் பூமியின் கருநிழலில் நுழைந்து, பகுதி சந்திரக் கிரகணம் தொடங்கியது. இது அன்று அதிகாலை 1.26 மணி அளவில் கிரகணம் முடிந்து சந்திரன் கருநிழலை விட்டு வெளியேறியது. அதிகாலை 2.25 மணிக்கு சந்திரன் புறநிழலைவிட்டு முழுமையாக வெளியேறியது.
* அடுத்த முழு சந்திர கிரகணம் 2026 மார்ச் 3ம் தேதி ஏற்படும்.