நெல்லை: அம்பாசமுத்திரம் பகுதி காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கிய வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜராகாததால், நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், கடந்த 2023 மார்ச் மாதம், காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மற்றும் அவரது குழுவினர் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 4 தனித்தனி வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் அப்போதைய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உட்பட 14 காவலர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் மீதான விசாரணை நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி சத்யா முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கிய போது, ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, எஸ்ஐ முருகேஷ், காவலர்கள் விவேக் ஆன்ட்ரூஸ், ராமலிங்கம், சுடலை ஆகிய 6 பேர் ஆஜராகவில்லை. இதில், பல்வீர் சிங் ஆஜராகாதது குறித்து அவரது வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு முறையான பதில் அளிக்கப்படாததால் கோபமடைந்த நீதிபதி, ‘‘இந்த வழக்கை மூன்று மாதங்களில் முடித்து விடுவதாக நான் முன்பே கூறியிருந்தேன். ஐபிஎஸ் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டாரா? அவருக்கு மட்டும் தான் கடமை இருக்கிறதா? மற்றவர்களுக்கு இல்லையா? அவரால் ஆஜராக முடியாவிட்டால், குறைந்தபட்சம் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரும் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் நான் விசாரணையைத் தொடர்ந்து நடத்த முடியும்’’ என்று எச்சரித்தார். தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 31ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களில் மைனர் சிறுவன் உட்பட இருவரின் தாய், தனக்கு நீதிமன்றத்தில் இருந்து இதுவரை சம்மன் வரவில்லை என்று தெரிவித்தார். அவருடன் வந்திருந்த ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் வழக்கறிஞர்கள், இந்த வழக்கை மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.