Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கத்தரி, வெண்டை, தக்காளி... இயற்கை விவசாயத்தில் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் அங்குள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இதனிடையே இயற்கை விவசாயியாகவும் வலம் வருகிறார். பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் தனக்கு சொந்த நிலத்தில் கத்தரி, வெண்டை, தக்காளி, கம்பு உள்ளிட்ட பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தி வருகிறார். ஒரு காலைப்பொழுதில் முருகேசனை சந்தித்தோம். ``ஆசிரியர் பணி, இயற்கை விவசாயம்... இந்த இரண்டும் எனக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது. எனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் கத்தரி, வெண்டை, தக்காளி ஆகிய மூன்று பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்கிறேன். இதில் கத்தரிக்கு 50 சென்ட், வெண்டைக்கு 25 சென்ட், தக்காளிக்கு முழு ஒரு ஏக்கர் நிலம் என ஒதுக்கி இருக்கிறேன். இந்தப் பயிர்களுக்கான நாற்றுகளை போச்சம்பள்ளியில் உள்ள நாற்றுப் பண்ணையிலிருந்து வாங்கி வந்து நடவு செய்தேன். எல்லாமே நாட்டு வகைகள்.

கத்தரிக்கு சீரான பராமரிப்பு இருந்தாலே போதும். கத்தரியை மூன்று முறை உழவு ஓட்டிய நிலத்தில்வரிசையாக இடைவெளி வைத்து நடுகிறேன். 2 அடி அகலம், ஆழமும் கொண்ட குழிகளில் பசுமாட்டுச் சாணம், பஞ்சகவ்யம், சிறிது தொழுவுரத்தோடு மண்ணைச் சேர்த்து நட்டால் செடி வேகமாக வளரும். எனது நிலம் கரிசல் மண் கொண்டது. அதிகம் நீர் தேங்காது. செடிகளை நடவு செய்த ஒரு வாரத்தில் உயிர்த்தண்ணீர் கொடுப்பேன். 15 நாட்கள் கழித்து களை எடுப்பேன்.இப்படியே செய்து வந்தால் கத்தரிச் செடியில் இருந்து 35வது நாள் பூக்கள் வரத்தொடங்கும். கத்தரிக்காய்கள் வளர ஆரம்பித்தவுடனே பூச்சிகளைக் கட்டுப்படுத்த பஞ்சகவ்யம், 3ஜி கரைசல் போன்ற இயற்கை மருந்துகளைத் தெளிப்பேன் . 3ஜி கரைசலுக்கு பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவிலேயே அரைத்து, வேப்பெண்ணைச் சேர்த்து தண்ணீரில் கலந்து தயார் செய்கிறேன். இதனால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு நல்ல மகசூல் கிடைக்கிறது. வாரத்திற்கு 130 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.

வெண்டைக்கு விதைகளை மட்டுமே ஊன்றி செடிகளை வளர்க்கத் தொடங்கினேன். பெரிய பராமரிப்பு தேவைப்படாது. உரிய அளவில் தண்ணீர் கொடுத்து பூச்சிகள் தாக்காமல் பார்த்துக்கொண்டால் போதும். வெண்டை நாற்று 15-20 நாட்களில் வளர்ந்துவிடும். ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் இடையில் 1.5 அடி இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்வேன். வெண்டைக்கு சாணம் சேர்த்த மண்தான் முக்கியம். பஞ்சகவ்யம் மாதம் ஒருமுறை கொடுக்கிறேன். சிறிய பூச்சி தொல்லைகள் இருந்தால் வேப்பெண்ணையை தண்ணீரோடு சேர்த்து தெளிக்கிறேன். 40வது நாளில் வெண்டைக்காய்கள் வளரத் தொடங்கிவிடும். காய்கள் வர ஆரம்பித்ததும் வாரம் மூன்று முறை அறுவடை செய்வேன். வெண்டையைப் பொருத்தவரை காய்களைப் பறிக்காமல் இருந்தால் செடி வாட ஆரம்பித்துவிடும். வாரத்துக்கு 150 கிலோ காய்கள் வரை மகசூலாக கிடைக்கும்.

தக்காளி நாற்றுகளை 2.5 அடி இடைவெளியில் வரிசையாக நடுகிறேன். ஒவ்வொரு செடிக்கும் ஒரு குச்சி கட்டி நேராக வளர வைக்கிறேன். பூத்துக் காய்க்கும் நேரத்தில் பஞ்சகவ்யம் தெளிக்கிறேன். மாதம் ஒருமுறை கம்போஸ்ட் உரம் கொடுப்பது நல்லது. காய்ப்பு தொடங்கி விட்டால் அறுவடையைத் தொடர்ந்து செய்யலாம். ஒவ்வொரு வாரமும் சுமார் 120 கிலோ தக்காளி மகசூலாக கிடைக்கும். நான் நேரடியாகவே வியாபாரிகளிடம் காய்கறிகளை விற்பனை செய்கிறேன். நல்ல தரமான, நாட்டு நறுமணமுள்ள காய்கறிகள் என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியாக வாங்கி செல்கிறார்கள். கத்தரிக்கு ஒரு கிலோ ரூ.18, வெண்டைக்கு ரூ.28, தக்காளிக்கு ரூ.12ன்னு சராசரி விலை கிடைக்கிறது. கத்தரியில் வாரத்திற்கு ரூ.2340, தக்காளியில் இருந்து வாரத்திற்கு ரூ.1440, வெண்டையில் வாரத்திற்கு ரூ.3000 வருமானமாக கிடைக்கிறது. வாரந்தோறும் ரூ.7 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், நாம் இயற்கை விவசாயம் செய்து நல்ல காய்கறிகளை உற்பத்தி செய்கிறோம் என்பது மனதுக்கு நிறைவான உணர்வைத் தருகிறது’’ என மகிழ்ச்சியோடு பேசினார்.

தொடர்புக்கு:

முருகேசன்: 63816 36266

ஆசிரியர் முருகேசன் தனது விவசாய முறைகளுக்கு தேவையான இயற்கை இடுபொருட்களை தனது வீட்டிலேயே தயார் செய்துகொள்கிறார். இவை காய்கறிப் பயிர்களுக்கு நல்ல பலன் தருவதாகவும் தெரிவிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், `` நமது நாட்டு மாடுகள் மற்றும் நமது ஊரில் விளையும் இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இடுபொருட்கள் நமது மண்ணில் விளையும் பயிர்களுக்கு ஏதுவாக இருக்கின்றன. நமது இயற்கைச் சூழலுக்கு அவை எளிதாக பொருந்தி விடுகின்றன. பஞ்சகவ்யத்தை மாதம் ஒருமுறையும், 3ஜி கரைசலை பத்து நாளுக்கு ஒருமுறையும் செடிகளுக்கு தெளிப்பேன். இவை செடிகளுக்குபுத்துணர்வு தருவதோடு, பூச்சிகளையும் கட்டுப்படுத்துகின்றன’’ என்கிறார்.