லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கிறார். அதிரடி ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர் என்று புகழ்ெபற்ற அவரது நடிப்பில் ‘மிஷன் இம்பாஸிபிள்’ என்ற படத்தின் 7 பாகங்கள் வெளியானது. சமீபத்தில் 8வது பாகமான ‘மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்’ என்ற படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்ைப பெற்றது. பல்வேறு சாதனைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான டாம் குரூஸ் திரைத்துறைக்கு ஆற்றியுள்ள பங்கிற்காக, அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்று, அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், டாம் குரூஸுக்கு நேற்று கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அவருடன் இணைந்து நடிகை டெபி ஆலன், நடிகர் வின் தாமஸ், பாடகி டோலி பார்டன் ஆகியோரும் கவுரவ ஆஸ்கர் விருது பெற்றனர். இதுவரை டாம் குரூஸ் நடிப்புக்காக ஆஸ்கர் விருது வெல்லாத நிலையில், இது அவரது முதல் அகாடமி விருது என்பது குறிப்பிடத்தக்கது.


