Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செப்.1ம் தேதி முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தபட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ல் போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் ஆக.31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயனீட்டாளர் கட்டணத்தை உயர்த்த உள்ளதால், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வது செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் அதிகரிக்க உள்ளது.

வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: சலுகை ஒப்பந்தத்தின்படி கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008ன் படி மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போது மாநிலத்தில் 67 செயல்பாட்டு சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.  அவற்றில் 25 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.