கட்டண வசூல் மட்டுமே நோக்கம்: சாமானிய மக்களை நசுக்கும் சுங்கச்சாவடிகள்; புதிய விதிகள் மூலம் மக்களிடம் பணம் பறிப்பு; லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு
* சிறப்பு செய்தி
உலகிலேயே மிகப்பெரிய சாலை போக்குவரத்து அமைப்பைக் கொண்டிருக்கக் கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நம்நாட்டில் மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்தில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவான பயணத்தை மேற்கொள்ளவும் சரக்குகளை எளிமையாக கொண்டு செல்லவும் நெடுஞ்சாலைகள் உதவுகின்றன. இந்தியாவில் 1,46,145 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளன. இதில் 1000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன.
இந்த சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. இவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 58 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 49 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும், 9 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008ன் அடிப்படையில் இந்தியாவில் சுங்க கட்டணங்கள் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது.
கார்கள், லாரிகள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. சாலைகள் பராமரிப்பு, மேம்பாடு, முறையான கண்காணிப்பு ஆகியவற்றுக்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சுங்க கட்டணங்கள் அனைத்து நெடுஞ்சாலைகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் பயணம் செய்யும் தொலைவு, நாம் பயணம் செய்யும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் சுங்க கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
சுங்கச் சாவடிகளை இரண்டாக பிரித்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. சாலை கட்டுமானப் பணிக்கான செலவு பராமரிப்பு அனைத்தும் குறிப்பிட்ட ஆண்டுகளில் வசூல் செய்த பிறகு டோல் அகற்றப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் டோல் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை இயங்க வேண்டும் என்பதில் வெளிப்படைத்தன்மை ஏதும் இல்லை. இதனால் ஆண்டுதோறும் சுங்கக்கட்டணம் மட்டுமே உயர்த்தப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த சுங்கச்சாவடியும் மூடப்படவில்லை.
மேலும் பெரும்பாலான சாலைகளில் பராமரிப்போ அல்லது தரம் மேம்பாடு ஆகியவை ஏதும் நடத்தப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி வாகனங்களில் பார் கோடுகளை கொண்ட பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அதன் கணக்கில் பணம் செலுத்த வேண்டும், சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் போது அங்குள்ள ஸ்கேனர் மூலம் பார்கோடு ஸ்கேன் செய்யபடும்.
அதன்மூலம் பயனரின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். பாஸ்ட் டேக் இல்லாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி முதல் பாஸ்ட் டேக்கில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சுங்கச் சாவடியை அடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது ஹாட் லிஸ்டில் இருந்தாலோ அல்லது குறைந்தபட்ச இருப்புத்தொகை இருந்தாலோ பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
அதாவது சுங்கச்சாவடிக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பாஸ்டேக்கில் ஏதேனும் பிரச்னை இருந்தால் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும். புதிய விதிகளின்படி, சுங்கச்சாவடியை அடைந்தவுடன் பாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டால், டோல் கட்டணம் செயல்படுத்தப்படாது. மேலும், ஸ்கேன் செய்வதற்கு குறைந்தது 10 நிமிடங்களுக்கு முன்பு பாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டிருந்தால், கட்டணமும் நிராகரிக்கப்படும். அதாவது, சுங்கச்சாவடியை அடைவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு ஒரு பாஸ்டேக் பிளாக் லிஸ்டிலோ அல்லது ஹாட்லிஸ்டிலோ அல்லது குறைந்த பேலன்ஸ் தொகையை கொண்டிருந்தால் அந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
ஒரு சுங்கச்சாவடியைக் கடப்பதற்கு முன் பாஸ்டேக் நிலையை சரிசெய்ய 70 நிமிட காலம் ஆகும்.சுங்கச்சாவடியை அடைந்தவுடன் பாஸ்டேக் பிளாக்லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டால், ஒரு பயனர் இரு மடங்கு சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் டேக் ஸ்கேனிங் செய்த 10 நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்யப்பட்டால், ஒருமுறை அபராதத் தொகையைத் திரும்பப் பெறக் கோரலாம். வாகனம் பாஸ்டேக் பார்கோடை கடந்து 15 நிமிடங்களுக்கு பிறகு சுங்கப் பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் கூடுதல் கட்டணங்களை செலுத்த நேரிடும். இந்த புதிய விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பயணிகளின் தேவைகளை அறியவும், குறைகளை கேட்கவும் அதனை சரி செய்யவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத போது, வசூலில் மட்டும் தேசிய நெடுஞ்சாலை துறை குறியாக இருப்பதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது: பாஸ்ட் டேக்கில் பேலன்ஸ் குறைவான பேலன்ஸ் இருந்தால் அபராதத்துடன் தொகையுடன் 2 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சுங்கச்சாவடிகளும் ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படவில்லை, சுங்கச்சாவடிகளுக்கு இடையே கட்டண வேறுபாடு இருக்கிறது. இத்தகைய சூழலில் இந்த விதிமுறை சரியானதாக தோன்றவில்லை.
மேலும் சாலை சரியில்லை என்று ஒரு புகார் அளித்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறதா?, கட்டணம் வசூல் செய்வது மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது. சரக்கு வாகனங்கள் ஒவ்வொன்றும் நிறுவனங்கள் சொல்லும் வழிகளில் தான் செல்லும். இதுபோன்ற சூழல்களில் இந்த நடைமுறை பெரும் சிக்கலை ஏற்படுத்தும், இதனால் ஓட்டுநர்கள் தான் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் சராசரியாக ரூ.55 ஆயிரம் கோடி சுங்கச்சாவடிகள் மூலம் வருமானம் கிடைக்கிறது.
இதனை ரூ.130 கோடியாக உயர்த்துவதற்காகவே இந்த புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளனர். சுங்கச்சாவடி கட்டண வசூலில் உள்ள குளறுபடிகளை சரி செய்யவே இதுபோன்ற விதிகள் அமல்படுத்தப்படுவதாக கூறுகின்றனர். ஆனால் இந்த குளறுபடிகளை சரி செய்து அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் தனியாருக்கு தாரைவார்க்கவே இதனை செய்கின்றனர். அதிக வாகனங்களை கொண்ட பெரிய போக்குவரத்து நிறுவனங்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் சிறிய அளவில் 10, 15 வாகனங்களை வைத்து இருப்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
* அமைச்சர் சந்திப்பு?
பாஸ்ட் டேக்கின் புதிய விதிமுறைகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அமைச்சரை தமிழக ெபாதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மாத வசூல் விவரம்
இடம் சுங்கக்கட்டணம் வசூல் (2023 ஏப். - 2024 நவ.) ஒரு மாத வசூல் (சராசரியாக)
வல்லம் ரூ.16.85 கோடி ரூ.84.24 லட்சம்
ஏனம்கரியாநந்தல் ரூ.13.84 கோடி ரூ.69.84 லட்சம்
தென்னம்மாதேவி ரூ.5.79 கோடி ரூ.28.98 லட்சம்
மொத்தம் ரூ.36.48 கோடி ரூ.1.82 கோடி
* 3 சுங்கச்சாவடிகளில் பல கோடி வசூல் அம்பலம்
வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் இடையேயான 110 கி.மீ. தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் 1.5 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்திவிட்டு, 3 சுங்கச்சாவடிகளை வைத்து நெடுஞ்சாலைகள் துறை பல கோடி சுங்கக் கட்டணம் வசூலித்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே வல்லம், ஏனம்கரியாநந்தல், தென்னமாதேவி ஆகிய பகுதிகளில் மூன்று சுங்கச்சாவடிகளில் மாதந்தோறும் சராசரியாக ரூ.1.82 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 20 மாதங்களில் அதாவது 2023ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024 நவம்பர் வரை மூன்று சுங்கச் சாவடிகளில் ரூ.36 கோடி வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு ஒன்றிய அரசு செலவிட்ட மொத்த தொகையே ரூ.273 கோடிதான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலாகக் கிடைத்துள்ளது. ஏற்கனவே இருந்த 5 மீட்டர் அகல சாலை தற்போது 8.5 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு 2023 ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு தேசிய நெடுஞ்சாலைக்கான எந்த தகுதிகளும் இந்த வழித்தடத்தில் இல்லை என்றும், பல இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகள், மேம்பால வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகளோடு, சுங்கக் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் வாகன ஓட்டிகள். அது மட்டுமல்ல, மோசமான சாலை அமைப்பினால் இங்கு ஒரு ஆண்டில் 244 விபத்துகள் நேரிட்டிருப்பதாகவும் 18 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 54 பேர் காயமடைந்திருப்பதாகவும் தரவுகள் கூறுகின்றன.