Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது: லாரி உரிமையாளர் சங்கங்கள், பொதுமக்கள் கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்கள் மாற்றியமைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்கிறது. இதன்படி நடப்பு நிதியாண்டில் 5 முதல் 10 சதவீதம் வரையிலான கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை ஆணையம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அதன்படி ஏற்கனவே 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் அமலுக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் ஒன்றிய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. ரூ.3000 கட்டினால் ஆண்டுக்கு 200 முறை சுங்கச்சாவடிகள் வழியாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டம் எலியார் பத்தி, சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி, வீரசோழபுரம், நத்தக்கரை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, மனவாசி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரம், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை, திருச்சி, திண்டுக்கல், மொரட்டாண்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட உள்பட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு நேற்ற அமலுக்கு வந்துள்ளது.

கார், ஜீப் போன்றவை ஒரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை. இரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணத்தில் ரூ.70 உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சு வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.15ம், இரு முறை பயணிக்க ரூ.20ம் மாதாந்திர கட்டணத்தில் ரூ.395ம் உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள சுங்கச் சாவடிகளிலும் விரைவில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு எந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்கிற விவரங்கள் தெரியவில்லை. மேலும், சுங்கக் கட்டண உயர்வால் தனியார் வாகனங்களின் வாடகை உயர்த்தப்படும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரக் கூடும். எனவே, சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கட்டண உயர்வு குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கூறுகையில், ‘‘இப்படி ஆண்டு தோறும் சுங்கக்கட்டண உயர்வதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. இதனால் அத்தியாவசியமான பொருட்களின் விலையே உயரக்கூடும்’’ என்றனர்.