Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய கழிவறை தொட்டியில் இறங்கிய போது விஷவாயு தாக்கி 3 சகோதரர்கள் உட்பட 4 பேர் பலி: ஜார்கண்டில் சோகம்

கட்வா: ஜார்கண்ட் மாநிலம், கட்வா மாவட்டம், நவாடா கிராமத்தைச் சேர்ந்த மோதி சவுத்ரியின் மகன்களான அஜய் சவுத்ரி (50), சந்திரசேகர் சவுத்ரி (42), ராஜு சேகர் சவுத்ரி (55) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த மேஸ்திரி மல்டு ராம் ஆகியோர் வீட்டு கட்டுமானப் பணிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிதாக கட்டப்பட்ட கழிவறை தொட்டியின் உள் பலகைகளை அகற்றும் பணி நடந்துள்ளது. முதலில் மேஸ்திரி மல்டு ராம் தொட்டிக்குள் இறங்கியுள்ளார்; ஆனால் அவர் வெளியே வரவில்லை. அவரைத் தொடர்ந்து ராஜு சேகர், பின்னர் அஜய் சவுத்ரி, சந்திரசேகர் என ஒவ்வொருவராக உள்ளே இறங்கியுள்ளனர்.

ஆனால், நால்வருமே வெளியே திரும்பவில்லை. இதையடுத்து, கிராம மக்கள் உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்துவந்து பார்த்த போது, அந்த குழிக்குள் நான்கு பேரும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நால்வரையும் தொட்டியிலிருந்து வெளியே மீட்டனர். அவர்களை கட்வா சதர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் நால்வரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கோர விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், துணை கோட்ட அதிகாரி சஞ்சய் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் நீரஜ் குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து ஆய்வு செய்தனர். காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தொட்டியில் நிரம்பியிருந்த விஷவாயு காரணமாக நால்வரும் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து நவாடா கிராமம் மற்றும் கட்வா நகரம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்களும், கிராம மக்களும் பெரும் துயரத்திலும், ஆத்திரத்திலும் உள்ளனர். பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டினர். சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மேல் விசாரணையை தொடங்கியுள்ளது.