Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கழிப்பறையில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பு; 10 நிமிடத்திற்கு மேல் உட்கார்ந்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

கடந்த காலங்களில் நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் மட்டும் கழிவறைகளை பயன்படுத்தி வந்தனர். திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக, இப்போது கிராமம், நகரம் என்ற பாகுபாடு இன்றி வசதிக்கு ஏற்றார்போல் வீட்டில் கழிவறை அமைத்து வருகின்றனர். செல்போன் பயன்பாடு தற்போது மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. கழிவறைக்கு செல்லும் போது கூட, செல்போன் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் செல்போன் மூலம் கிருமிகள் பாக்டீரியாக்கள் உடலில் நுழைந்து பாதிப்பு ஏற்படுத்தும் சூழல் உள்ளது.

செல்போனை முடிந்தளவிற்கு கழிப்பறைக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: தற்போதைய சூழலில் செல்போன் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதை சரியான முறையில் பயன்படுத்துவதே மனித சமூகத்திற்கு ஆரோக்கியத்தை தரும். குறிப்பாக பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடப்பு செய்திகளை தெரிந்த கொள்ள, சாட் செய்ய, ரீல்ஸ் பதிவிட பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக கழிவறைக்கு சென்று செல்போனை பயன்படுத்தும் போக்கு மிக அளவில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக தங்களுக்கு உரியவர்களுடன் பேச அல்லது மெசெஜ் செய்ய கழிவறைக்கு செல்கின்றனர். இதனால் பல்வேறு உடல்பாதிப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது. செல்போன்களை கழிவறையில் பயன்படுத்தும் போது, செல்போன் மூலம் பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் மூலம் உடலுக்கு நுழையும் அபாயம் உள்ளது. செல்போனில் உள்ள பாக்டீரியாக்கள் கண், வாய், மூக்கின் வழியாக மனித உடலுக்குள் நுழைகிறது. இதன் காரணமாக வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது.

மருத்துவ ஆய்வறிக்கையின் படி செல்ேபான் திரையில் உள்ள கிருமிகள் 28 நாட்கள் உயிர்வாழும் எனவும் கூறப்பட்டுள்ளது.  நீண்ட நேரம் கழிவறையில் உட்கார்ந்து இருப்பதால் இடுப்பு பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு ரத்த ஓட்டத்தை பாதிப்படைய செய்யும். மேற்கிந்திய கழிப்பறையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், மலக்குடல் நரம்புகளில் ரத்தம் குவிதல், காலப்போக்கில் இடுப்பு தசைகள் பலவீனமடைகின்றன. இரைப்பை, பெருங்குடல், குடல் நோய், சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

தொடர்ச்சியாக இந்த பழக்கத்தை பின்பற்றும் போது மூலநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. மருத்துவ குழுவினர் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை, 18 வயது முதல் 45 வயது வரை உள்ள 14,500 பேரிடம் ஆய்வு செய்தனர். அவர்களில் 90% பேர் கழிவறைகளில் செல்போன் பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களில் 27% பேர் ஒரு முறை கழிவறைக்கு சென்றால் 15 நிமிடங்களுக்கு மேல் உள்ளே இருக்கின்றனர். இதன் காரணமாக நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலுக்கும் சிலர் உள்ளது கண்டறியப்பட்டது.

செல்போனை கழிவறைக்கு எடுத்துச் சென்றாலும், வௌிய வந்த பிறகு ஒரு துணியினால் செல்போனை துடைக்க வேண்டும். முடிந்தவரை செல்போன், இயர்போன், இயர்பட்ஸ் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல வேண்டாம்.ேமலும் செல்போன் தவறுதலாக கழிவறையில் விழுந்தால் சேதம் ஏற்படும். பெரும்பாலான முக்கிய பைல்கள் அனைத்துமே செல்போனிலேயே வைத்து வருகிறோம்.

எனவே, திடீரென கழிவறை குளியல் அறை தண்ணீரில் விழுந்தால் அன்றாட பணிகளை பாதிப்படையச் செய்யும் சூழல் உள்ளது. கழிப்பறையில் 10 நிமிடங்களுக்கு மேல் உட்கார வேண்டாம். செல்போனை கழிவறைக்கு உள்ளே எடுக்க வேண்டாம். பாக்டீரியா சிதறாமல் இருக்க சுத்தப்படுத்துவதற்கு முன் கழிப்பறை மூடியை மூட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* செல்போனை கழிவறைக்கு எடுத்துச் சென்றாலும், வௌிய வந்த பிறகு ஒரு துணியினால் செல்போனை துடைக்க வேண்டும்.

* முடிந்தவரை செல்போன், இயர்போன், இயர்பட்ஸ் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல வேண்டாம்.

* மருத்துவ ஆய்வறிக்கையின்படி செல்போன் திரையில் உள்ள கிருமிகள் 28 நாட்கள் உயிர்வாழும் என கூறப்பட்டுள்ளது.

* இந்திய கழிப்பறை சிறந்தது

இந்திய வகை கழிப்பறை இயற்கையாக மலம் கழிக்க எளிதாகவும் ஆரோக்கியமாக உள்ளது. நீண்ட நேரம் கழிவறையில் உட்கார்ந்திருப்பதால் தாமதமாக மலம் கழிக்கவும், அதிகப்படியான அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் ஓய்வாக அமர்ந்திருக்கும் போது, ​​இயற்கையாகவே மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவிழந்து, குடல் இயக்கத்தை குறைத்து, நாள்பட்ட மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். இது மலச்சிக்கலின் தீய சுழற்சியை ஏற்படுத்துகிறது. இது மலச்சிக்கலைத் தூண்டுகிறது.