தோகைமலை : தோகைமலை அருகே வடசேரி பள்ளி மாணவிகள் 18 பேர் உள்பட 20 பேர் விஷ கதண்டுகள் கடித்து தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி வடசேரி பகுதியைச் சேர்ந்த மாலினி 15, ஜெயஸ்ரீ 15, பவித்ரா 16, ஹேமலதா 17, காவியா 17, சஹானா 16, தனுஷ்கா 14, ஜெயபாரதி 15, நர்மதா 16, பாவனா 17, பவித்ரா 15, பாவனா 16, கனகா ஸ்ரீ 17, திலகவதி 16, கீர்த்தனா 16, விகாசினி 17, ருத்திரன், போதும்பொண்ணு 17, ஆகியோர் ஆர்.டி. மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலை 5 மணி அளவில் ஆர்.டி. மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து வடசேரி பகுதிக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது நாவல் நாயக்கம்பட்டி அருகே பள்ளி மாணவிகள் நடந்து சென்ற போது, பலத்த காற்று வீசி உள்ளது. இதில் வடசேரி - ஆர்.டி. மலை மெயின் ரோட்டில் உள்ள புளிய மரத்தில் விஷ கதண்டுகள் கூடு கலைந்து உள்ளது.
இதில் விஷ கதண்டுகள் அனைத்தும் ரோட்டில் நடந்து சென்ற பள்ளி மாணவிகளை கடித்துள்ளது. இதனால் அனைத்து மாணவிகளும் கதறி துடித்து அழுதுள்ளனர். மேலும் தப்பிக்க முயன்று தாங்கள் சுமந்து சென்றுள்ள பள்ளி பைகளை ஆங்காங்கே கீழே போட்டுவிட்டு சிதறி நாலாபுரமும் பள்ளி மாணவிகள் தப்பி ஓடி உள்ளனர்.
இருந்த போதும் விஷ கதண்டுகள் விடாமல் பள்ளி மாணவிகளை துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில் வலி தாங்க முடியாமல் அனைத்து மாணவிகளும் ஆங்காங்கே மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதே போல் அந்த ரோட்டில் வடசேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் 50, நாகரத்தினம் 51, ஆகியோரும் சென்றபோது இவர்களையும் விஷ கதண்டுகள் தாக்கியுள்ளது. இதில் இருவரும் வலி தாங்க முடியாமல் துடித்து மயங்கி கீழே விழுந்தனர்.
தகவல் அறிந்த வடசேரி மற்றும் ஆர்.டி. மலைப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்று அங்கு பறந்து கொண்டிருந்த விஷ கதுண்டுகளை நெருப்பு பற்ற வைத்து அதன் மூலம் விஷக்கதண்டுகளை துரத்தி உள்ளனர். பின்னர் மயங்கி கிடந்த பள்ளி மாணவிகளையும், பொதுமக்களையும் ஆம்புலன்ஸ் மூலம் காவல்காரன்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அனைவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளித்த அரசு மருத்துவ அலுவலர்கள், மேல் சிகிச்சைக்காக அனைவரையும் திருச்சி தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
இதனை அடுத்து அனைத்து மாணவிகளும் திருச்சி தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
அங்கு சுப்பிரமணியன், நாகரத்தினம் உள்பட அனைத்து மாணவிகளும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர் தகவல் அறிந்த குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தோகைமலை கிழக்கு செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பள்ளி மாணவிகளையும் பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் மருத்துவ அதிகாரிகளை சந்தித்து சிகிச்சை அளிக்கும் முறைகளையும் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அனைவருக்கும் ஆர்லிக்ஸ் உள்ளிட்ட சத்துப் பொருட்களை வழங்கினார்.