கோவை: யானைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக யானைகள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. செயல்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக வனவிலங்குகளில் பலருக்கும் பிடித்த விலங்காக யானைகள் உள்ளன. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே வாழும் யானைகளில், ஆசிய யானைகளில் பாதிக்கு மேல் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டிய கோவை, நீலகிரி உள்ளிட்ட வனக்கோட்டங்களில் அதிகளவில் காட்டு யானைகள் உள்ளன. யானைகள் தங்கள் நாளில் கிட்டத்தட்ட 80 சதவீத நேரத்தை உணவு தேடுவதிலும், சாப்பிடுவதிலும் செலவு செய்யும். ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 கிலோ வரை உணவுகளை உட்கொள்கின்றன. தாவர உண்ணிகளான யானைகள் பல்வேறு வகையான தாவரங்களை உண்கின்றன.
இதன் விளைவாக அவற்றின் சாணம் விதைகளால் நிறைந்துள்ளது. இந்த விதைகளுக்கு நல்ல முளைப்பு திறன் இருப்பதால், தாவரங்களை வளரச் செய்வதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கோவை வனக்கோட்டம் 694 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாய்க்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக காட்டு யானைகள் அதிகளவில் இருப்பதோடு, வலசை செல்லும் யானைகளும் வந்து செல்கின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அடிக்கடி நடந்து வருகிறது.
கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலத்தில் மொத்தம் 14,962 முறை காட்டு யானைகள் வனப்பகுதியைவிட்டு வெளியே வந்துள்ளன. போளுவாம்பட்டி, தடாகம், பெ.நா.பாளையம், கல்லார், சிறுமுகை ஆகிய பகுதிகள் அதிக மனித-யானை மோதல் உள்ள பகுதியாக உள்ளன. மனித-யானை மோதல்களை தடுக்கவும், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி தான் அதிகளவில் வெளியே வருகின்றன. வனப்பகுதியில் அவற்றுக்கு போதிய உணவு கிடைக்காததே இதற்கு காரணம் ஆகும். காடுகள் சுருக்கம், அந்நிய களைச் செடிகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைதான் உணவு பற்றாக்குறைக்கு காரணமாக உள்ளன.
அதேபோல வனப்பகுதியை ஓட்டி பயிரிடப்படும் கரும்பு, வாழை போன்றவற்றை சாப்பிட்டு பழகும் யானைகள், கிராமங்களுக்குள் நுழைந்து ரேசன் அரிசி, கால்நடை தீவனங்கள் உள்ளிட்டவற்றையும் சாப்பிட்டு வருவது அதிகரித்துள்ளது. இதனால் காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களும், மனித-யானை மோதல்களும் அதிகரித்து வருகின்றன. வலசை பாதை ஆக்கிரமிப்பு, வனப்பகுதியை ஓட்டி கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், நாட்டு வெடிகள், வனப்பகுதியில் அதிவேகமாக இயக்கப்படும் ரயில்கள் உள்ளிட்டவை யானைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. இது குறித்து சூழலியல் செயற்பாட்டாளர்கள் கூறியதாவது: காடுகளைக் காக்க யானைகள் அவசியம். முன்பு வேட்டையால் யானைகள் உயிரிழந்தன. இப்போது வேட்டை தடுக்கப்பட்டாலும், ரயில் விபத்துகளாலும், சட்டவிரோத மின்சார வேலிகளாலும் யானைகள் அதிகம் உயிரிழக்கின்றன.
குறிப்பாக ஆண் யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கோவையில் ரயில் விபத்துகளைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சிறப்பாகச் செயல்படுகிறது. இதை இந்தியா முழுவதும் பயன்படுத்த வேண்டும். மின் வேலிகளால் யானைகள் உயிரிழப்பது, அவை காட்டை விட்டு வெளியே வருவதால் ஏற்படுகிறது. இது யானைகளுக்கும். மனிதர்களுக்கும் முரணை ஏற்படுத்துகிறது. யானைகள் வெளியே வராமல் தடுக்க, அவற்றின் வாழிடத்தை மேம்படுத்த வேண்டும். யானைகள் வந்து செல்லும் யானை வழித்தடங்கள் முக்கியமானவை. தமிழ்நாட்டில் 42 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அரசால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு இது குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். ஆனால், இவை இன்னும் அதிகாரப்பூர்வமாக அரசு அறிவிக்கவில்லை. இந்த வழித்தடங்களை உடனடியாக அறிவித்தால், யானைகள் தடையின்றி நடமாட முடியும்.
இல்லையெனில், வாழிடம் சுருங்கி, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் யானைகள் காட்டைவிட்டு வெளியே அதிகளவில் வரும். யானைகளுக்கு காட்டில் உணவு, தண்ணீர் கிடைக்காதபோது, வாழிடம் அவற்றை வெளியே தள்ளுகிறது. வெளியே, விவசாயிகள் பயிரிடும் பயிர்கள் யானைகளை ஈர்க்கின்றன. இதனால் மனித-யானை மோதல் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, வாழிடத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும். எல்லா யானைகளும் வெளியே வருவதில்லை. குறிப்பிட்ட யானைகள் மட்டுமே வெளியே வருகின்றன. இவற்றை அடையாளம் காண நவீன தொழில்நுட்பமும் ஆய்வுகளும் தேவை. யானைகளைக் கண்காணிக்க ‘ரேடியோ காலர்’ கருவி பயன்படுத்தப்பட வேண்டும். கோவையில் இது தோல்வியடைந்தாலும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். யானை-மனித மோதலைத் தவிர்ப்பதே உலக யானைகள் தினத்தின் நோக்கம்.
யானைகள் வாழும் காட்டருகே உள்ள விவசாயிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்புக்கும் பாதிப்பில்லாத நவீன அறிவியல் யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு கூடுதல் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும். தனி அமைப்பு அமைத்து, பிரச்சினை யானைகளை அடையாளம் காண கள ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். நமது பிள்ளைகளுக்கு காடு வேண்டும். அந்தக் காட்டில் யானைகள் வேண்டும். யானைகள் வாழ்ந்தால்தான் வருங்கால சந்ததியினர் நலமாக வாழ முடியும். இதை அனைவருக்கும் பரப்ப வேண்டும். யானைகளையும், மனிதர்களையும் இணக்கமாக வாழ வைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
17 மாதங்களில் ரயில் தண்டவாளத்தை பாதுகாப்பாக கடந்த 5,260 யானைகள்
கோவை மதுக்கரை பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏஐ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த ஒராண்டில் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் யானைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025ம் ஆண்டு மே மாதம் வரையிலான 17 மாதங்களில், 1,278 முறைகளில் மொத்தம் 5,260 காட்டு யானைகள் ரயில்வே தண்டவாளத்தை பாதுகாப்பாக கடந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் 32 காட்டு மாடுகள், 9 சிறுத்தைகள், 22 மான்களும் ரயில்வே தண்டவாளத்தை பாதுகாப்பாக கடந்து சென்றது ஏஐ கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் ரயில் விபத்துகளில் யானைகள் உயிரிழப்பு நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.