சென்னை: தமிழ்நாட்டில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகியபணிகளை சார்ந்த 1996 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு https://www.trb.tn.gov.in வாயிலாக கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. தமிழ் 216, ஆங்கிலம் 197, கணிதம் 232, இயற்பியல் 233, வேதியியல் 217, தாவரவியல் 147, விலங்கியல் 131, வணிகவியல் 198, பொருளியல் 169, வரலாறு 68, புவியியல் 15, அரசியல் அறிவியல் 14, கணினி பயிற்றுநர் நிலை-1 பதவி 57, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பதவி 102 என மொத்தம் 1,996 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்காக ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று (அக்.12) நடைபெற உள்ளது.
‘தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல். தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல். அரசியல் அறிவியல், கணினி அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில், பாடங்கள் சார்ந்த காலிப்பணியிடங்களுக்கு 2,36,530 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் 1,73,410 ஆண்கள், 63,113 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் அடங்குவர். குறிப்பாக. மாற்றுத்திறனாளிகள் 3,734 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 856 தேர்வர்கள், தாங்கள் சொல்வதை எழுதுபவர்கள் (Scribe) உடன் தேர்வு எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 809 மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வர்கள் கவனத்திற்கு
* காலை 10 முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வு நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.
* தேர்வறையில் அடையாளம் சரிபார்ப்பின்போது, தேர்வர்கள் ஆதார் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை கண்டிப்பாகக் காண்பிக்க வேண்டும்.
* தேர்வறைக்குள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள், எலக்ட்ரானிக் கைக்கடிகாரம், கால்குலேட்டர், கையேடுகள் போன்றனவற்றுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.