Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்று முதல் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் எஸ்ஐஆர் பணியை தொடங்கும் தேர்தல் ஆணையம்: அரசியல் களத்தில் பரபரப்பு

சென்னை: எஸ்ஐஆர் குறித்து முதல்வர் தலைமையில் கூட்டப்பட்ட அனைத்து கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் இன்று முதல் வாக்காளர்கள் கணக்கெடுக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது மற்றும் சரிபார்ப்பது குறித்த விதிமுறைகளில் மாபெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து உள்ளது. பீகார் மாநிலத்தில் வரும் 6 மற்றும் 11ம்தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தன. அங்கு நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால், அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்து‌ள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து 47 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். 21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் விமர்ச்சனத்தை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குரிமையை பறிப்பதோடு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து அவர்களை வாக்காளர்களாக மாற்றும் சதி நடக்க இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. அதற்கு ஏற்றவாறு வாக்காளர்களை நீக்குவதை விட, இணைப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த புதிய நடைமுறையில், குறிப்பாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்குப் பல புதிய வசதிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தான் தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. முந்தைய 8 முறையும் வாக்குரிமை மட்டுமே சரி பார்க்கப்பட்டது. தற்போது குடியுரிமையை சரி பார்ப்பது தான் இதன்‌ உண்மையான‌ நோக்கம். அதற்காகவே 11 ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு ஆதார் அட்டை 12வது ஆவணமாக இதில் சேர்க்கப்பட்டாலும் திருத்தப் பணியின்போது, ஆதார் அட்டை ஓர் அடையாள ஆவணமாக மட்டுமே ஏற்கப்படும். குடியுரிமை, பிறந்த தேதிக்கான சான்றாக ஏற்கப்படாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர் வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி வாக்காளர்களின் விவரங்களை சேகரிப்பார்.

அப்போது 2002-04க்கு முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் எந்த ஆவணமும் தரத் தேவை இல்லை. 1987ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் அனைவரும் எஸ்ஐஆர்ல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தையும், பெற்றோர் யாரேனும் ஒருவருடைய ஆவணத்தையும் கொடுக்க வேண்டும். 2004ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய ஆவணம் மற்றும் பெற்றோர் இருவரின் ஆவணத்தையும் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் விடுபட்டவர்கள் தகுந்த ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் முதல் மேல்முறையீடு மற்றும் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.

தற்போது எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட இருக்கிற 12 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் இன்னும் 6 மாத காலத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. அப்படி இருக்கையில், இங்கு நீக்கப்படும் வாக்காளர்கள் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் குறைவாகவே உள்ளது. அதற்குள்ளாகவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விடும். அதன் பிறகு அவர்களால் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள இயலாது. மேலும் எஸ்ஐஆர் நடைமுறை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் உடனடியாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிற மாநிலங்களில் தேர்தலுக்குப் பிறகு போதிய கால அவகாசத்துடன் விரிவாக மேற்கொள்ளலாம்.

அப்படியில்லாமல் உடனடியாக அவசரகதியில் இதை மேற்கொள்வது பாஜவுக்கு ஆதரவாக அமையும் என்ற சந்தேகம் வலுப்படுகிறது. பீகாரில் நடத்தப்பட்ட எஸ்ஐஆர் பாஜவுக்கு ஆதரவான வாக்குகள் சேர்க்கப்பட்டதையும், அதற்கு எதிரான வாக்குகள் நீக்கப்பட்டதையும் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி ஆதாரத்தோடு வெளிப்படுத்தினார். அதனால் தான் தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த நடைமுறையை எதிர்க்கிறது.

இதுகுறித்து ஆலோசிக்க முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.

கூட்டத்தில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பீகாரில் நடந்த குளறுபடிகளை சரி செய்யாமல் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடத்துவது வாக்குரிமையை பறிக்கும் செயல் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இதற்காக, தமிழ்நாட்டில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் ஆட்சேபனைகள் தீர்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* 12 ஆவணங்கள் எவை?

விண்ணப்பத்துடன் இணைத்து தர தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணப் பட்டியலில் உள்ள 12 ஆவணங்கள்: ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டை/ஓய்வூதிய தொகை உத்தரவு, 1987 ஜூலை 1க்கு முன் அரசு, உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை/சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், 10 வகுப்பு கல்விச் சான்றிதழ், நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், ஓபிசி, எஸ்சி, எஸ்டி சான்றிதழ்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு (தேவைப்படும் இடங்களில்), குடும்பப் பதிவேடு, நிலம்/வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ், ஆதார்.