திண்டுக்கல்: தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை, 118 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) 9வது டி20 தொடர், திண்டுக்கல்லில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் - ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய திருப்பூர் அணியின் துவக்க வீரர்கள் ஆரம்பம் முதல் திண்டுக்கல் வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
11வது ஓவரில் அணியின் ஸ்கோர் 121 ஆக இருந்தபோது, முதல் விக்கெட்டாக அமித் சாத்விக் (65 ரன், 34 பந்து) அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் துஷார் ரஹேஜா 46 பந்துகளில் 77 ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் திருப்பூர் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்தது. பின், 221 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய அஸ்வின் 1 ரன்னில் வீழ்ந்தார்.
பின் வந்தோர் யாரும் சிறப்பாக ஆடாததால், 14.4 ஓவரில் திண்டுக்கல் 102 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதனால், 118 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற திருப்பூர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. திருப்பூர் தரப்பில், ரகுபதி சிலம்பரசன், மோகன் பிரசாத், இசக்கி முத்து தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 77 ரன் குவித்த திருப்பூரின் துஷார் ரஹேஜா ஆட்ட நாயகன்.


