Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த 4 ஆண்டுகளில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,21,415 கோடி வங்கிக்கடன் இணைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 2,50,44,448 சுய உதவிக்குழு மகளிருக்கு ரூ.1,21,415 கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு, மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டை உள்ளடக்கிய செயல்பாட்டினையே முதன்மை நோக்கமாகக் கொண்டு அனைத்து வறுமை ஒழிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் என்ற ஒரு தனி நிறுவனத்தை தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

முன்னாள் முதல்வர் கலைஞர் மகளிர் சமூக, பொருளாதார மேம்பாடு அடைந்திட வேண்டும் என்ற உன்னத தொலைநோக்கு பார்வையுடன், முதன்முறையாக 1989ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிக் குழு இயக்கம் என்ற மகத்தான இயக்கம் தொடங்க வித்திட்டார். கலைஞரின் வழியில் நல்லாட்சி புரிந்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், துணை முதலமைச்சரின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு சாதனைகளைப் படைத்த வருகிறது.

சுய உதவிக் குழுக்களின் பொருளாதார தேவையைக் கருத்தில் கொண்டு, அவைகளின் தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. முதலமைச்சரின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-22ம் நிதி ஆண்டில் 4,08,740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392.52 கோடி, 2022-23ம் நிதி ஆண்டில் 4,49,209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642.01 கோடி, 2023-24ம் நிதி ஆண்டில் 4,79,350 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30,074.76 கோடி, 2024-25ம் நிதி ஆண்டில் 4,84,659 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,189.87 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க முதல்வர் அறிவித்துள்ளதை தொடர்ந்து, 18.7.2025 வரை 1,04,538 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 13,58,994 உறுப்பினர்களுக்கு ரூ.9,113.24 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நான்காண்டுகளில் 19,26,496 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 448 சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1,21,415.40 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்து, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.