ஈரோடு மாவட்டம், எலத்தூர் ஏரி மாநிலத்தின் மூன்றாவது உயிரியல் பாரம்பரியத் தளமாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மைச் சட்டம் 2002, பிரிவு 37(1)ன் கீழ், அரிட்டாபட்டியை நவம்பர் 2022 இல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது மற்றும் காசம்பட்டி மார்ச் 2025 இல் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 37.42.50 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஈரோடு மாவட்டத்திலுள்ள எலத்தூர் ஏரியை மாநிலத்தின் மூன்றாவது உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையினை இன்று (01.09.2025) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் அவர்கள் வெளியிட்டார்கள். இந்நிகழ்வில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு உயிர்ப்பல்வகைமை வாரியம், செல்வி மித்தா பானர்ஜி இ.வ.ப., சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் யாகேஷ் குலால், இ.வ.ப., சூழல் அறிவோம் வி. தீபக் மற்றும் பி. நாகராஜன், தலைவர், பல்லுயிர் மேலாண்மை குழு, எலத்தூர் பேரூராட்சி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள் "எலத்தூர் ஏரியை தமிழ்நாட்டின் மூன்றாவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிப்பதன் மூலம், அதன் உயிரினங்கள் மற்றும் வாழ்விடங்களின் செழுமையை மட்டுமல்லாமல், பல தலைமுறைகளாக இயற்கையுடன் ஒத்துழைந்து வாழ்ந்த உள்ளூர் சமூகங்களின் ஞானத்தையும் நாம் கொண்டாடுகிறோம்” என்றார். தமிழ்நாடு மாநிலத்தில் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க பல்வேறு விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்ச எண்ணிக்கையிலான ராம்சர் தளங்கள் அறிவிக்கப்பட்டது மற்றும் அழிந்து வரும் உயிரின பாதுகாப்பு நிதியை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் பல்லுயிர் பாதுகாப்பினை உறுதி செய்கிறது. இந்நிலையில், எலத்தூர் ஏரியை மூன்றாவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது இம்முயற்சியில் ஒரு மைல்கல் ஆகும். இந்த அறிவிப்பைப் பற்றி கருத்து தெரிவித்த திருமதி சுப்ரியா சாகு இ.ஆ.ப, "எலத்தூர் ஏரி என்பது ஆழமான நீர்நிலைகள், சேற்றுப் பள்ளத்தாக்குகள், புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் சமூக மரபுகள் ஆகியவற்றின் துடிப்பான நீர்நிலை ஆகும். இது இயற்கை மற்றும் மக்களின் மீள்தன்மைக்கு ஒரு உண்மையான சான்றாகும்.
இதை ஒரு பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிப்பது, பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்கள் கைகோர்த்துச் செல்வதை உறுதி செய்யும் அதே வேளையில், அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. இந்த நடவடிக்கை கட்டுப்பாடுகள் பற்றியது அல்ல, மாறாக அதிகாரமளித்தல், விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாக உள்ளூர் சமூகங்களுக்கு அங்கீகாரம் பற்றியது. பல்லுயிர் பாதுகாப்பில் தமிழ்நாடு தொடர்ந்து தலைமைத்துவத்தைக் காட்டியுள்ளது, மேலும் எலத்தூர் இந்தப் பயணத்தில் சேருகிறது, இந்த ஏரியின் அதிசயங்கள் வரும் தலைமுறையினர் அறிந்துகொள்ளவும் கொண்டாடப்படுவது மற்றும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது." ஏற்கனவே அரிட்டாப்பட்டி 21.11.2022-லும் அதனைத் தொடர்ந்து காசம்பட்டி 12.03.2025-லும் அறிவிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. பல்லுயிர் பாரம்பரிய தளங்கள் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், தனித்துவமான மற்றும் அழியக்கூடிய நிலையில் உள்ள உயிரினங்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தாயகமாகும்.
அவை அரிய, அச்சுறுத்தலுக்கு உள்ளான மற்றும் முக்கிய உயிரினங்களைப் பாதுகாக்கின்றன, பரிணாம முக்கியத்துவத்தைப் பாதுகாக்கின்றன, மேலும் இயற்கையுடனான கலாச்சார உறவுகளை வலுப்படுத்துகின்றன. உயிரியல் பாரம்பரியத் தள அங்கீகாரம் உள்ளூர் சமூகங்களிடையே பெருமையை வளர்க்கிறது, பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்துகிறது மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையுடன் பாரம்பரிய வாழ்வாதாரங்கள் செழித்து வளர்வதை உறுதி செய்கிறது. முக்கியமாக, உயிரியல் பாரம்பரியத் தளம், உள்ளூர் சமூகங்களின் பாரம்பரிய நடைமுறைகள் அல்லது பழக்கவழக்கங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. மாறாக, இது சுற்றுச்சூழலின் சமநிலையை மேம்படுத்துகிறது மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது. எலத்தூர் ஏரி ஒரு பரிணாம சூழலியல் முக்கியத் தளமாகவும், புலம்பெயரும் மற்றும் இடம்பெயராத பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்வகை ஈர நில அமைப்புகளுக்கு முக்கிய வாழ்விடமாகவும் விளங்குகிறது. இதன் ஆழமான நீர்ப்பரப்புகள், அடர்த்தியான கரைகள், சளிக்காடுகள் மற்றும் கற்களால் ஆன பகுதியில் காணப்படும் இயற்கைக் காட்சிகள், செழுமையான உயிர்பல்வேறு தன்மையைத் தாங்கிக் கொண்டுள்ளன.
புலம்பெயர்ந்துவரும் பருவங்களில் சுமார் 5,000 பறவைகள் எலத்தூர் ஏரியில் கூடுகின்றன. இந்த ஏரி, ஆபத்தான நிலையில் உள்ள ஸ்டெப்ப் ஈகிள், இரண்டு அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் (நதிக்காக் மற்றும் பெரிய புள்ளி ஈகிள்) மேலும் ஐந்து உயிரினங்களான (ஆசிய கம்பளக்கழுத்து நாரை, சிவந்த கழுத்து பறவைகள், ஓவிய நாரை, கிழக்கு நீர்த்தாரை மற்றும் கருந்தலை வெண்ணாரை) ஆகியவற்றைப் பாதுகாக்கும் இடமாக உள்ளது. மொத்தமாக, இங்கே 187 வகையான பறவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் முக்கிய பறவை இனங்கள் பின்வருமாறு நார்தெர்ன் பின்டெய்ல், கர்கனேய் (Garganey),வாக்டெயில்கள் (Wagtails), சாண்ட்பைபர்கள் (Sandpipers), வார்பிளர்கள் (Warblers), பார்-ஹெடெட் கூஸ் (Bar-headed Goose), கிரீன்-விங்க்டு டீல் (Green-winged Teal), ஷவுலர் (Shoveler), விஜியன் (Wigeon) மற்றும் ஷ்ரைக் (Shrike) எலத்தூர் ஏரியில் பதிவாகியுள்ள முக்கிய உயிரினங்கள் பின்வருமாறு: 38 தாவர வகைகள், 35 பட்டாம்பூச்சி வகைகள், 12 தட்டான் பூச்சி (Dragonflies), 12 இழைச்சிட்டிகள் (Damselflies), 12 ஊர்வன (Reptiles), 7 பாலூட்டிகள் (Mammals), நீர்நில வாழ்வன (Amphibians), மீன்கள் மற்றும் முதுகெலும்பில்லா பிராணிகள் (Invertebrates) மேலும், எலத்தூர் ஏரி ஒரு உயிரியல் பரம்பரை மையமாக (genetic diversity) செயல்பட்டு, பருவநிலை மாற்றத்தினை தழுவும் திறனையும் நிலைத்தன்மையையும் வழங்குகிறது.
2025ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி, எலத்தூர் நகர பஞ்சாயத்து இந்த அறிவிப்பை ஆதரித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, இது உள்ளூர் பாதுகாப்புப் பண்புகளின் வலிமையை வெளிப்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து, 28-01.2025-ம் நாளிட்ட கடிதத்தில் இந்த அறிவிப்புக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். ஏரியின் பாதுகாப்பு சுற்றுச்சூழல் நன்மைகளை மட்டுமல்லாது, இந்த சூழலியலுடன் நெருக்கமாக தொடர்புடைய பண்பாட்டு மரபுகள் மற்றும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கிறது. எலத்தூர் ஏரியை ஒரு உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவிப்பதன் மூலம், தமிழ்நாடு, பாதுகாப்பு மற்றும் நிலைத்த பாரம்பரிய மேலாண்மையில் தனது தலைமைப் பங்கை வலுப்படுத்துகிறது. இந்த அங்கீகாரம், எலத்தூர் ஏரியின் உயிர்பல்வேறு தன்மை, பரிணாம பங்கு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவங்களை பாதுகாக்கின்றது, இது எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு மரபுரிகை பண்பாகத் தொடரும்.