டெல்லி: தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தேசிய ஜனநாயக கூட்டணி பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழக பாஜகவின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி, மாநில தலைவர் நயினார், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர். அமித் ஷா வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அழைப்பு விடுத்தும் அண்ணாமலை மட்டும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அமித்ஷா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும்.
கருத்து வேறுபாடுகளும் உட்கட்சி பூசல்களும் அதிகரித்து வருவது தமிழக பா.ஜ.க. வளர்ச்சிக்கு நல்லதல்ல. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமை அவசியம். கோஷ்டி மோதல், கருத்து வேறுபாடுகள் இன்றி பாஜக நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூரப்பப்டுகிறது.