Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம், "ஏன்? எதற்கு? எப்படி?" என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டி

சென்னை: தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம், "ஏன்? எதற்கு? எப்படி?" என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் கல்வி, ‘சமூக நீதி மற்றும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க அடித்தளமாக அமையும்’ என்று அறிவுறுத்தியிருந்தார். அந்த வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் மற்றும் பொதுமக்களைப் போலிச் செய்தி, வெறுப்புப் பேச்சு, அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் போன்றவற்றிலிருந்து மடைமாற்றி, பகுத்தறிவுப் பாதையில் வழிநடத்தும் நோக்குடன் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையத்துடன் இணைந்து, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம், "ஏன்? எதற்கு? எப்படி?" என்ற தலைப்பில் 8 பிரிவுகளில் விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது.

சமூக ஊடகத்தின் சவால்களான போலிச் செய்தியும் வெறுப்புப் பேச்சும் ஐக்கிய நாடுகளின் ஆய்வு ஒன்றில், சமூக வலைதளங்களில் பதிவிடும் படைப்பாளிகளில், மூன்றில் இரண்டு பங்கு நபர்கள், முறையாக சரிபார்க்கப்படாத தகவல்களைத் தான் பதிவிடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில், தொழில்நுட்ப மேம்பாட்டின் பாதகமாய்ப் போலிச் செய்தி பரவல் உருவெடுத்துள்ளது. அரசுக்கு எதிராகவும், மக்களைத் திசை திருப்பவும், சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கவும், கருத்துருவாக்கம் செய்யவும் இவை பரப்பப்படுகின்றன. போலிச் செய்திகளைப் போலவே தீவிரமான விளைவுகளைக் கொண்டது வெறுப்புப் பேச்சு.

தனிமனிதர்களையும் மக்கள் குழுக்களையும், அவர்களின் சாதி, மதம், இனம், மொழி, பாலினம் உள்ளிட்ட அடையாளங்களுக்காகக் குறிவைத்து, தவறான கருத்துகளைப் பரப்பி, பாதிப்புக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது வெறுப்புப் பேச்சு. சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, சமத்துவப் பாதையில் முன் நகரும் தமிழகத்தைப் பின்னோக்கி இழுக்கிறது இந்த வெறுப்புக் கலாச்சாரம். தேவை அறிவியல் மனப்பான்மையும் சமூக நீதியும் பெருகிவரும் சமூக ஊடகப் பயன்பாட்டில் போலிச் செய்திக்கும், வெறுப்புப் பேச்சுக்கும் இரையாகாமல் பொதுமக்கள் பாதுகாக்கப்பட, சிந்தனையளவிலும் செயலளவிலும் பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, சமத்துவம், சமூக நீதி போன்றவை அடித்தளங்களாய் அமைய வேண்டும்.

மேற்கண்ட உயர் பண்புகளை மாணவர்களும் பொது மக்களும் வளர்த்துக் கொள்ள அவசியமாய்த் தேவைப்படுவது, கேள்வி கேட்கும் மனப்பாங்கும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் சிந்திக்கும் திறனும் தான்.இதற்கான விதைகளை அவர்களின் தனித்திறமைகளின் வழி விதைத்திட ஏதுவாக, “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் 8 பிரிவுகளில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில், சமூக ஊடகங்களான எக்ஸ் தளம் (X), இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp), மற்றும் யூட்யூப் (YouTube) வாயிலாகப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிகளும் அதன் விதிமுறைகளும் பின்வருமாறு;-

பேச்சுப்போட்டி தலைப்புகள் ( வயதுவரம்பு கிடையாது )

1. இந்தியாவின் மதச்சார்பின்மையின் முக்கியத்துவம்.

2. அறிவியல் மனப்பான்மை ஏன் அவசியம்?

3. வெறுப்புப் பேச்சை விட்டொழிப்போம்.

4. டிஜிட்டல் உலகில் பகுத்தறிவின் அவசியம்.

5. சமூகநீதி காக்க இடஒதுக்கீடு.

6. நான் கண்ட போலிச்செய்தி.

(நீங்கள் கண்ட ஒரு போலிச் செய்தி குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் பேசலாம்)

மேற்கண்ட ஏதாவது ஒரு தலைப்பில் 3 நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோவாக எடுத்து அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 10 போட்டியாளர்களுக்கு சென்னையில் இரண்டாம் சுற்று நடைபெறும்.

கட்டுரைப் போட்டி தலைப்புகள் ( வயதுவரம்பு கிடையாது )

1. அனைவரும் சமம்.

2. மதச்சார்பற்ற இந்தியா.

3. போலிச்செய்தியைப் புறக்கணிப்போம்.

4. சமூகநீதியில் முன்னோடியாய் விளங்கும் தமிழ்நாடு.

5. சமூகநீதி காக்க இட ஒதுக்கீடு .

6. பெண்ணியம் பேசுவோம் ஆண்களே.

குறிப்பு - மேற்கண்ட தலைப்புகளுள் ஏதேனும் ஒரு தலைப்பில் ஏ4 தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி word அல்லது pdf கோப்புகளாக அனுப்பி வைக்க வேண்டும்.

கவிதைப் போட்டி தலைப்புகள் ( வயதுவரம்பு கிடையாது )

1. மெய்ப்பொருள் காண்பது அறிவு

2. பிறப்பால் அனைவரும் சமம்

3. பண்படுத்தும் பகுத்தறிவு

குறிப்பு - மேற்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றுக்கு 16 வரிகளுக்கு மிகாமல் மரபுக்கவிதை அல்லது புதுக்கவிதை எழுதி word அல்லது pdf கோப்பாக அனுப்ப வேண்டும்.

வாசகம் எழுதும் போட்டி

போலிச் செய்தி மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு எதிராகவும், சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் விதமாகவும் வாசகங்களை எழுத வேண்டும்.

குறிப்பு - ஒருவர் எத்தனை வாசகங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். வாசகங்கள் இதுவரை வெளிவராதவையாகவும், சொந்த படைப்பாகவும் இருக்க வேண்டும்.

குறும்படப் போட்டி

1. கருத்துச் சுதந்திரமும் வெறுப்புப் பேச்சும்

2. சமூகநீதி போற்றும் தமிழ்ச்சமூகம்

3. பகுத்தறிவும் அறிவியலும் - தலைமுறை மாற்றத்தின் அடித்தளம்

குறிப்பு - குறும்படங்கள் 1 நிமிடம் 30 வினாடிக்குள் இருக்க வேண்டும்.

மீம் தயாரித்தல் போட்டி

1. போலிச் செய்திகளும் செயற்கை நுண்ணறிவும் (AI)

2. அறிவியல் மனப்பான்மை

3. தகவல் சரிபார்ப்பு

4. மதச்சார்பின்மை

5. சமத்துவ இந்தியா

குறிப்பு - மீம்களை JPG, PNG கோப்புகளாக அனுப்ப வேண்டும்.

புகைப்படப்போட்டி

1. கருத்து சுதந்திரமும் வெறுப்புப் பேச்சும்

2. சமூகநீதி போற்றும் தமிழ்ச்சமூகம்

3. பகுத்தறிவும் அறிவியலும் - தலைமுறை மாற்றத்தின் அடித்தளம்

குறிப்பு - புகைப்படங்களை JPG, PNG கோப்புகளாக அனுப்ப வேண்டும்.

ஓவியப்போட்டி

1. அனைவரும் சமம்

2. மனிதம் போற்றுவோம்

3. அன்பை அந்நியமாக்கும் வெறுப்புப் பேச்சு

குறிப்பு - ஆகிய தலைப்புகளை உள்ளடக்கமாகக் கொண்டு ஓவியங்கள் அமைய வேண்டும். PDF, JPG, PNG கோப்புகளாக அனுப்பி வைக்க வேண்டும்.

தங்கள் படைப்புகளை tndiprmhoct@gamil.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.