சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக பதவியேற்றுள்ள வெங்கட்ராமனை நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உயர் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் நேற்று சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்களுடன் நேரில் சென்று புதிய டிஜிபி வெங்கட்ராமனை சந்தித்தார்.
அப்போது கமிஷனர் அருண் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பிறகு பெருநகர காவல்துறையில் பணியாற்றும் கூடுதல் கமிஷனர்களான கண்ணன், பிரவேஷ்குமார், கார்த்திகேயன், ராதிகா மற்றும் இணை கமிஷனர்களான விஜயகுமார், மனோகர், பண்டி கங்காதர், தீஷா மிட்டல், சோனல் சந்திரா ஆகியோரை டிஜிபியிடம் கமிஷனர் அருண் தனித்தனியாக அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த சந்திப்பின் போது, சென்னை பெருநகர காவல் துறையில் சட்டம் -ஒழுங்கு மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக டிஜிபி கமிஷனர் அருணுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.