Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிராம ஊராட்சிகளில் அனுமதி இல்லாத கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும்: அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் அளித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பொன்னையா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் ஒன்றினை உருவாக்கி, அதில் கட்டிட அனுமதியை மூன்று வகைகளில் வழங்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சுயசான்றின் அடிப்படையில், 2500 சதுர அடியிலிருந்து மனையில், 3000 சதுர அடி வரையிலான பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டுமானங்களைக் கட்டிக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

கட்டிடத்தின் பரப்பளவு 10,000 சதுர அடிக்கு கீழ் உள்ள பட்சத்தில் அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம், இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இக்கட்டிட வரைபடங்களின் ஆவணங்கள் உரிய அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கட்டிட வரைபட அனுமதி இணைய தளம் மூலம் வழங்கப்படுகிறது. 10,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு, தொழில்நுட்ப அனுமதி நகர் மற்றும் ஊரமைப்பு துறை மூலம் பெறப்பட்டு, இறுதி ஒப்புதல் கிராம ஊராட்சியின் நிர்வாக அலுவலரால் வழங்கப்படுகிறது. இவ்வாறு கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடங்கள் என்றும், கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் என்றும் வரையறை செய்யப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களின் கட்டுமானத்தை நிறுத்த, நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

அவை :

  •  கிராம ஊராட்சிகளின் நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிமேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி சான்றினைகோரி அறிவிப்பு வழங்க வேண்டும்.
  • அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாகக் கள ஆய்வு செய்ய வேண்டும். முழுமையாக கட்டப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
  • கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும், அதிலிருந்து விதிமுறைகளை மீறி கட்டுமானங்கள் அமைந்துள்ளதா என்றும் ஆய்வு செய்து அதற்கான முழு விவரத்தையும் ஆய்வறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
  • கட்டுமானம் முடிவு பெற்றிருப்பின் முடிவறிக்கை உரிய தொழில்நுட்ப அலுவலரிடம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
  • கட்டிடம் சொத்து வரி விதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதா அல்லது விடுபட்டுள்ளதா என்பதைக் குறிப்பிட வேண்டும்.
  • கட்டிடத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் கழிவுநீர் வசதி ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
  • அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட கட்டிடம் தொடர்ந்து கட்டப்பட்டு கொண்டிருந்தால் அதை பூட்டி முத்திரை இடும் அதிகாரம் கிராம ஊராட்சிகளின் நிர்வாக அலுவலருக்கு உண்டு. அதை படிவம் 3ல் சம்பந்தப்பட்ட நபருக்கு அறிவிப்பாக சார்வு செய்ய வேண்டும்.
  • கட்டிட வரைபட அனுமதி இன்றி கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களின் உரிமையாளருக்கு அளிக்கப்படும் அறிவிப்பானது உரிய அலுவலர்களால் நேரடியாக சம்பந்தப்பட்ட நபருக்கு சார்பு செய்யப்பட வேண்டும். அவ்வாறு சார்வு செய்யப்படும் போது, அந்த நபர் இல்லை என்றால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த நபரிடம் அந்த அறிவிப்பினைச் சார்பு செய்யலாம்.
  • இந்த இரண்டு நபர்களும் இல்லை என்றால் தற்போது அந்த நபர் வசிக்கும் முகவரிக்கு பதிவு தபால் மூலம் ஒப்புகை அட்டையையும் இணைத்து அனுப்பி சார்பு செய்யலாம். அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை மேற்கொள்ளும் நபர்கள் மீது வழங்கப்பட்ட அறிவிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவிக்கையுடன் அவர்கள் எடுத்த நடவடிக்கையின் விவரம் அறிவிக்கையின் நகல் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து கிராம ஊராட்சியின் நிர்வாக அலுவலருக்கு அளிக்கவேண்டும்.
  • அவ்வாறு உரிய ஆவணங்களுடன் வரப்பெறும் பதிலுரைக்கு உரிய ஒப்புகை சீட்டு கிராம ஊராட்சியின் செயலர்களால் வழங்கப்பட வேண்டும்.
  • இந்த ஆவணங்களை கிராம ஊராட்சியின் செயலர், உரிய தொழில்நுட்ப அலுவலர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  • கிராம ஊராட்சியின் நிர்வாக அலுவலர், தொழில் நுட்ப அலுவலர் இக்கட்டிடங்களின் ஆய்வறிக்கைக்கு தனியான பதிவேடு பராமரிக்க வேண்டும். இந்த பதிவேட்டில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை ஆய்வு செய்யும் அலுவலர் தனது குறிப்புரையினை பதிவு செய்து அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
  • உரிய அறிவிக்கையின்படி கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படவில்லை எனில், அக்கட்டிடத்தினை பூட்டி சீல் வைக்கவும் உரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சியின் நிர்வாக அலுவலர், ஊராட்சியின் ஆய்வாளரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.