திருவாரூர் மத்திய பல்கலை.யில் இன்று விழா; 1,110 மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி பட்டம் வழங்கினார்: அமைச்சர்கள் பங்கேற்பு
திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென்னையில் தனியார் வங்கி நிகழ்ச்சியை முடித்துகொண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு ஓய்வெடுத்தார். இன்று காலை சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் மாவட்டம் நீலக்குடி சென்றார். அங்கு மத்திய பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கத்தில் நடைபெற்ற 10வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். விழாவிற்கு பல்கலைகழக வேந்தர் பத்மநாபன் தலைமை வகித்தார்.
துணை வேந்தர் கிருஷ்ணன் வரவேற்றார். 442 மாணவர்கள், 568 மாணவிகள் என மொத்தம் 1,110 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. இதில் மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் தங்க பதக்கம் பெற்ற 34 மாணவிகள் மற்றும் 11 மாணவர்கள் என 45 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டம் வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் திரவுபதி முர்மு மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று விமானப்படை தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.