திருவண்ணாமலையில் ஜொலிக்கும் மகா தீபம் : அக்னி பிழம்பாக தோன்றிய ஈசன்.. "அரோகரா" முழக்கம் விண்ணதிர பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அரோகரா கோஷம் விண்ணதிர 2,668அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான கடந்த 29ம் தேதி வெள்ளி தேரோட்டமும், 30ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும் நடந்தது. 10ம் நாளான இன்று, ‘மகாதீப பெருவிழா’ கோலாகலமாக நடைபெறுகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு இன்று அதிகாலை 4 மணிக்கு, ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து பணி தீபத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல் உண்ணாமுலையம்மன் சன்னதியிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பரணி தீபம் வைகுண்ட வாயில் வழியாக, இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ள மலைக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர் 2ம் பிரகாரம் மற்றும் 3ம் பிரகாரத்தில் காத்திருந்த பக்தர்களுக்கு பரணி தீப தரிசனம் காண்பிக்கப்பட்டது. அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு பரணி தீபத்தை தரிசனம் செய்தனர். இதற்காக அதிகாலை 2 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அங்கு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே காட்சிகொடுக்கும் அர்த்தநாரீஸ்வரர் மாலை 5.58 மணிக்கு கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் எழுந்தருளினார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றினர். அதை தொடர்ந்து 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது.
இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும். தொடர்ந்து இன்றிரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். நாளை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளையும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, 5,484 சிறப்பு பஸ்கள் மற்றும் 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) டேவிட்சன்ஆசிர்வாதம் தலைமையில், 2 ஐஜிக்கள், 6 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ‘பேஸ் டிராக்கிங்’ எனும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் பொருத்தப்பட்டு கூட்ட நெரிசல் கண்காணிக்கப்படுகிறது.

