திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தையொட்டி பக்தர்களை மலையேற அனுமதிப்பது குறித்து பரிசீலனை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை: திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேடவாக்கம் டேங்க் ரோடு பகுதியில் திரு.வி.க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஓஎஸ்ஆர் நிலத்தில் ரூ.39.50 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், திரு.வி.க. நகர் எம்எல்ஏ தாயகம் கவி, மேயர் பிரியா மற்றும் மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி சேமாத்தம்மன் கோயிலில் மண்டபம் கட்டுமான பணிகளையும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களிடம் பேசியதாவது: ஐயப்பன் கோயிலில் சுழற்சி முறையில் 2 பணியாளர்களை தேவஸ்தான போர்டில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்து சமய அறநிலைத்துறையின் சென்னை அலுவலக்த்திலும் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையத்தை அமைத்துள்ளோம். தேனி மற்றும் கேரளாவை சுற்றி உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளோம். ஆன்லைனில் பதிவு செய்யாமல் செல்லும் பக்தர்களால் சபரிமலையில் கூட்டம் அதிகரிக்கிறது. அதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் மக்கள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர். 10 நாள் தேரோட்டம் நடைபெறும் போதும் இந்த விழா முடியும் வரை சிறப்பு கட்டண தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் கிரிவல பாதை அகலப்படுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக இந்த முறையும் பக்தர்கள் மலையேற அனுமதி கொடுப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. கொப்பரை தீபம் ஏற்றுபவர்கள் தான் மலை மேலே அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறை 35 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


