திருவண்ணாமலை மருத்துவமனைக்கு சென்றபோது 4 பவுன் நகைக்காக இளம்பெண்ணை கடத்தி காதலனுடன் சேர்ந்து கொன்ற கள்ளக்காதலி: சாக்குமூட்டையில் கட்டி கரும்பு தோட்டத்தில் சடலம் வீச்சு
கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மருத்துவமனைக்கு சென்றபோது இளம்பெண்ணை கடத்தி கொன்று 4 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு, சாக்குமூட்டையில் சடலத்தை கட்டி கரும்பு தோட்டத்தில் வீசி உள்ளனர். இதுகுறித்து கள்ளக்காதலனுடன் கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ஏந்தல் பைபாஸ் சாலை சம்மந்தனூர் சாலையோரம் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த கரும்பு தோட்டம் வழியாக நேற்று காலை பொதுமக்கள் சென்றபோது கடும் துர்நாற்றம் வீசியதால், இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கரும்பு தோட்டத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது ஓடையில் கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது. பின்னர் மூட்டையை பிரித்து பார்த்தபோது அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூட்டையில் சடலமாக கிடந்த பெண் 25 வயது மதிக்கத்தக்கவர் என்பதும், மர்ம நபர்கள், அவரை கொலை செய்து மூட்டையில் கட்டி கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்றதும் தெரிய வந்தது.
சம்பவம் குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தனது மனைவியை காணவில்லை என்று கடந்த 15ம் தேதி கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் சாக்குமூட்டையில் சடலமாக கிடந்தது சக்திவேலின் மனைவி அம்சா (26) என தெரியவந்தது.
இதையடுத்து கரும்பு தோட்டம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில் ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு பெண் ஒருவர் சம்பவம் நடந்த பகுதியில் சென்றது பதிவாகி இருந்தது. இதைதொடர்ந்து ஸ்கூட்டியின் எண்ணை வைத்து விசாரணை செய்ததில் கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா(30) என்பது தெரியவந்தது. அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில் அம்சாவை நேத்ரா மற்றும் அவரது கள்ளக்காதலன் கீழ்பென்னாத்தூரை அடுத்த கொல்லகொட்டா பகுதியை சேர்ந்த திருப்பதியுடன் (25) சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் நேத்ரா மற்றும் திருப்பதியை கைது செய்தனர்.
நேத்ரா அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: அம்சா கடந்த மாதம் 15ம் தேதி ஒன்றரை வயது மகனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே இறங்கி மருத்துவமனைக்கு செல்வதற்காக அவலூர் பேட்டை சாலையில் ரயில்வே கேட் அருகே வந்தார். அப்போது நானும், திருப்பதியும் சேர்ந்து அவரை திருவண்ணாமலை வேங்கிகால் பகுதியில் உள்ள திருப்பதியின் வீட்டிற்கு ஆட்டோவில் கடத்தி சென்றோம்.
அங்கு அம்சா அணிந்திருந்த 4 பவுன் நகையை கொடுக்க வற்புறுத்தினோம். இதை அம்சா தர மறுத்தார். அப்போது அம்சாவை கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அவரது மகனை திருவண்ணாமலை- திண்டிவம் சாலை அருகே சாலையில் தனியாக விட்டு விட்டு அம்சாவின் உடலை சாக்குப்பையில் கட்டி திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாபட்டு சாலை அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் வீசி சென்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.
4 சவரன் நகைக்காக பெண்ணை கொலை செய்து சாக்குப்பையில் கட்டி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

