Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கை நகருக்கு வெளியே இடம் மாற்ற நடவடிக்கை

*பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

*மக்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை நகரில் உள்ள குப்பைக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது. அதையொட்டி, அதற்கான இடத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். அங்கு மக்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே ஈசான்ய மயானம் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்திருக்கிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கில், ஆயிரக்கணக்கான டன் குப்பைக் கழிவுகள் மலைபோல குவிந்திருக்கிறது.

மக்கும் தன்மையில்லாத பிளாஸ்டிக் கழிவுகளுடன் பல ஆண்டுகளாக குப்பை குவிந்திருப்பதால், அந்த பகுதியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு மிகுந்து காணப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் குப்பைக்கழிவுகள் சகதியாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. வெயில் காலங்களில் சமூக விரோதிகள் குப்பைக் கிடங்குக்கு தீ வைப்பதால், நச்சுப்புகை வெளியேறி மக்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும், கிரிவலப்பாதைக்கு அருகிலும், அஷ்டலிங்க சன்னதிகளில் நிறைவு சன்னதியான ஈசான்ய லிங்க சன்னதிக்கு அருகிலும் குப்பைக் கிடங்கு அமைந்திருப்பதால் கிரிவல பக்தர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பைக் கிடங்கை, நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமான பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என நீண்டகாலமாக பொதுமக்களும், கிரிவல பக்தர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை ஈசான்யம் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பைக் கிடங்கை, காஞ்சி சாலையில் புனல்காடு பகுதிக்கு மாற்றுவதற்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதையொட்டி, நகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள புனல்காடு பகுதியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குப்பைக் கிடங்கு அமைய உள்ள இடத்தின் பரப்பளவு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மறு சுழற்சி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், அங்கு குப்பை கிடங்கு அமைவதால், அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்காதபடியும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதபடியும் உரிய அனைத்து பணிகளையும் முறையாக செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், புதிய இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணிகள் முடிந்ததும், மக்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆய்வின்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்பி.,சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் ப.கார்த்தி வேல்மாறன், பிரியா விஜயரங்கன், துரைவெங்கட், மெய்யூர் சந்திரன், எம்.ஆர்.கலைமணி, ஏ.ஏ.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.