Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 15 ஏக்கரில் அமைகிறது ரூ.64.30 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கு இடம் தேர்வு

*பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக ரூ.64.30 கோடி மதிப்பில் அமையும் பக்தர்கள் தங்கும் விடுதிக்கான இடத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அமைந்துள்ள திருவண்ணாலை அண்ணாமலையார் கோயிலை தரிசிக்கவும், கிரிவலம் சென்று வழிபடவும் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, சமீப காலமாக தினந்தோறும் பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.

எனவே, திருவண்ணாமலையில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கான தேவையும் உயர்ந்துள்ளது. மேலும், கிரிவலப்பாதையில் ஈசான்யம் அருகே தற்போது செயல்படும் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் உள்ள அறைகள் போதுமானதாக இல்லை. எனவே, கூடுதலாக தங்கும் விடுதி அமைக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது.

அதையொட்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ,வேலுவின் தொடர் முயற்சியால், அண்ணாமலையார் கோயில் சார்பில் கூடுதலாக பக்தர்கள் தங்கும் விடுதி கிரிவலப்பாதையில் அமைக்க ரூ.64.30 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 2,10,531 சதுர அடி பரப்பளவில் 476 நபர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டுமான பணி விரைவில் தொடங்க உள்ளது.

தற்போது அமையும் பக்தர்கள் தங்கும் விடுதியில், 2 நபர்கள் தங்கும் 128 அறைகள், 6 நபர்கள் தங்கும் 24 அறைகள், 10 நபர்கள் தங்கும் 6 அறைகள் மற்றும் குடியிருப்பு வடிவிலான 8 வில்லாக்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரிவலப்பாதையில் செங்கம் இணைப்பு சாலை அருகே சோணாநதி தீர்த்தம் அருகே சுமார் 15.65 ஏக்கர் பரப்பளவில் தங்கும் விடுதி அமைய உள்ள இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். புதிய விடுதி கட்டுமான பணிக்காக மாதிரி வரைபடத்தின் அடிப்படையில், ஆய்வு பணியை மேற்கொண்ட அமைச்சர், அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன் விடுதி அமைய வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், பக்தர்கள் தங்கும் விடுதியில் அனைத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும் எனவும், பக்தர்கள் தங்கும் விடுதிக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் சாலை வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, கிரிவலப்பாதையில் தனியார் பங்களிப்புடன் 5 இடங்களில் தலா ரூ.50 லட்சம் மதிப்பில் சர்வதேச தரத்தில் அமையும் சுகாதார வளாகங்களை பார்வையிட்டார். இப்பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

அதோடு, சுகாதார வளாகங்களுக்கு தேவையான தடையில்லா தண்ணீர் வசதி, கழிப்பறைகளில் காற்றை வெளியேற்றும் மின் விசிறிகள், மின் விளக்குகள், ஸ்டீல் கதவுகள் போன்றவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

ஆய்வின்போது, கலெக்டர் தர்ப்பகராஜ், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாநகர பகுதி செயலாளர்கள் சு.விஜயராஜ், பா.ஷெரீப், துரைவெங்கட், ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.