Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை நீடிப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஆறுகளில் வெள்ளம்

*வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்

திருவண்ணாமலை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்தது. மேலும், வழக்கத்தைவிட இந்த ஆண்டு பருவமழை கூடுதலாக பெய்யும் எனவும் தெரிவித்தது.அதன்படி, வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் விட்டு விட்டு பரவலான மழை நீடிக்கிறது.

ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 35 சதவீதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக பெய்தது. அதன் தொடர்ச்சியாக, வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவில் தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள், திறந்தவெளி பாசன கிணறுகள் என அனைத்து நீர் நிலைகளும் முன்கூட்டியே நிரம்பி வருகின்றன.

குறிப்பாக, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த பிறகே அணைகள் நிரம்பும். ஆனால், இந்த ஆண்டு பருவமழையின் தொடக்கத்திலேயே அணைகள் நிரம்பியிருக்கிறது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

ஆனாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் காரணமாக கனமழை இல்லை. அதே நேரத்தில், பரவலான மழை தொடர்ந்து நீடிக்கிறது. திருவண்ணாமலையில் நேற்று பகல் முழுவதும் மழை மேகம் சூழ்ந்து இதமான நிலை காணப்பட்டது. மேலும், விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. அதேபோல், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று மிதமான மழை பெய்தது,மேலும், சாத்தனூர் அணையின் மொத்தமுள்ள 119 அடியில் 113.05 அடியும், கொள்ளளவு6036 மி.கன அடியும் நிரம்பியுள்ளது.

அணைக்கு வினாடிக்கு 2100 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து வினாடிக்கு 2100 கன அடி நீர் தென்பெண்ணை வழியாக வெளியேற்றப்படுகிறது.

அதேபோல், செண்பகத்தோப்பு, குப்பனத்தம், மிருகண்டா அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும், தென்பெண்ணை ஆறு, செய்யாறு, கமண்டல நதி, நாகநதி, துரிஞ்சலாறு போன்றவற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு உள்ளது. அதேபோல், ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

பெரிய ஏரி நிரம்பி கோடி போனது

ஆரணி, கண்ணமங்கலம் பகுதியில் உள்ள நாகநதி மற்றும் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் காமக்கூர் ஊராட்சியில் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரிக்கு கமண்டல நாகநதி ஆற்றிலிருந்து நீர்வரத்து வந்துகொண்டிருந்த நிலையில் நேற்று ஏரி முழுகொள்ளளவை எட்டி நிரம்பி கோடி போனது.

பொதுமக்கள் காமக்கூர் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, காமக்கூர்பாளையம் பகுதியில் உள்ள சீக்கையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.தொடர்ந்து ஏரி கோடிபோகும் பகுதிக்கு பொதுமக்கள் தாம்பூல சீர்வரிசையுடன் சென்று ஏரி நிரம்பி கோடி போகும் உபரி நீரை மலர் தூவி வரவேற்றனர். கிராம மக்கள் ஏரிகோடி போன இடத்தில் குளித்து மகிழ்ந்தனர்.

மழை அளவு

திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று காலை வரை பதிவான மழை அளவின் அடிப்படையில், போளூரில் 4.2 மிமீ, ஜமுனாமரத்தூரில் 4.2 மிமீ, கலசபாக்கத்தில் 3.4 மிமீ, ஆரணியில் 4 மிமீ, செய்யாறில் 6 மிமீ, வந்தவாசியில் 9 மிமீ, வெம்பாகத்தில் 7 மிமீ, சேத்துப்பட்டில் 3.4 மிமீ மழை பதிவானது.