திருவண்ணாமலையில் 2வது நாளாக விடிய விடிய பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்: சுவாமியை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருப்பு
திருவண்ணாமலை: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று 2வது நாளாக கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலையார் மலையை கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி நேற்றிரவு 9.45 மணிக்கு தொடங்கி இன்றிரவு 7.29மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி நேற்று மதியம் முதலே கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் விடியவிடிய கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது.
கிரிவலம் சென்ற பக்தர்கள், கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்க சன்னதிகள் மற்றும் இடுக்கு பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்தனர். வழக்கம்போல குபேர லிங்க சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. அண்ணாமலையார் கோயிலிலும் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திர நாளில் அண்ணாமலையாருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் 5ம்பிரகாரத்தில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு பிறகு வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 2வது நாளாக இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜையுடன் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அதிகாலை 5.30 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர்.
கிரிவலம் முடித்த பக்தர்களின் வசதிக்காக 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும், அம்மாநில அரசுகள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. திருவண்ணாமலை ரயில் நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரிவலத்தை முன்னிட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
