*தூய்மைப் பணியை கண்காணிக்க குழு அமைத்து உத்தரவு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் புதிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், மேயர் நிர்மலா வேல்மாறன், மாநகராட்சி ஆணையாளர் செல்வ பாலாஜி, துணை மேயர் சு.ராஜாங்கம், உதவி கலெக்டர்(பயிற்சி) அம்ருதா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாநகருக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருகின்ற காரணத்தால், திருக்கோயில் வளாகம், மாடவீதி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் சேகரித்து தூய்மை செய்யும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். குப்பைகள் முறையாக சேகரிப்பு செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு உயர்மட்ட ஆய்வு குழு அமைக்க வேண்டும்.
மேலும், சேகரிக்கப்படும் குப்பைகளை உரிய முறையில் தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு புதியதாக 6 நுண் உர மையங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தினந்தோறும் குடிநீர் வழங்க, தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைவாக முடிக்க வேண்டும்.
மேலும், மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், கிரிவலப்பாதையில் அறநிலையத்துறை சார்பாக கட்டப்பட்டு வரும் பக்தர்களுக்கான கழிவறைகளை விரைவாக கட்டி முடிக்க வேண்டும், கழிவறைகளுக்கு தேவையான குடிநீரை விநியோகம் செய்ய 2 புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை அமைக்க வேண்டும். இயங்காத மின் விளக்குகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாநகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான திடக்கழிவு மேலாண்மை, மற்றும் தடையில்லா சுகாதாரமான குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை பணிகள் ஆகிய பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.கூட்டத்தில், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தரன், கார்த்தி வேல்மாறன், எஸ்.பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், துரைவெங்கட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.