*அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு, புதிய தீயணைப்பு நிலையத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை சமீப காலமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். தினசரி கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் எணணிக்கையும் அதிகரித்துள்ளது.
எனவே, திருக்கோயில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புக்காக அண்ணாமலையார் கோயில் முன்பு புதிய தீயணைப்பு நிலையம் மற்றும் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு ஏற்கனவே தற்காலிகமாக செயல்பட்டு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு நிரந்தர தீயணைப்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய தீயணைப்பு நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புதிய தீயணைப்பு நிலையத்தை தொடங்கி வைத்தார். மேலும், அதற்கான புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். திருண்ணாமலை மாவட்டத்தில், ஏற்கனவே 14 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்திருக்கிறது.
மேலும், திருவணணாமலை நகரின் மையப்பகுதியில், அண்ணாமலையார் திருக்கோயில் முன்பு புதிய தீயணைப்பு நிலையம் திறந்திருப்பது பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராம்பிரதீபன், வடமேற்கு மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன், தீயணைப்பு நிலைய அலுவலர் திருவண்ணாமலை மணி, முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், மாநகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.