திருத்தணி: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், விவசாயிகள் கரும்பு அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கரும்பு விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பை திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி பயன்பெற்று வருகின்றனர். கரும்பு விதை நட்டு 12 மாதங்களில் அறுவடைக்கு வரும் கரும்பை, கூலி ஆட்கள் வைத்து வெட்டி வாகனங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்படுகிறது. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்டு 7 கோட்டங்களில் இருந்து 2.051 விவசாயிகள் 7.505 ஏக்கர் பரப்பளவில் கரும்பு நடவு செய்து ஆலைக்கு அனுப்ப முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில். நடப்பு 2025-26ம் ஆண்டுக்கான கரும்பு அரவை கடந்த வாரம் அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். இதையடுத்து, விவசாயிகளுக்கு கரும்பு ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு வெட்டி ஆலைக்கு அனுப்ப முன் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெட்டு அனுமதி பெற்றுள்ள விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து கரும்பு வெட்டி டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர்.
திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் தொழிலாளர்களை அழைத்து வந்து கரும்பு வெட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயிகள் கோரிக்கை ஏற்று இந்த ஆண்டு டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். கடந்த ஆண்டு 3300 வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விலை உயர்த்தி வழங்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை இலக்கு 2 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஆலை நிர்வாகம் சார்பில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கரும்பு கால தாமதமின்றி அரவை செய்யப்பட்டு வருவதால், விவசாயிகள் கரும்பு அறுவடை பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
டன்னுக்கு ரூ.650 கூலி
கரும்பு அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கூலி ஆட்களுக்கு 1 டன் கரும்புக்கு வெட்டு கூலியாக ரூ.650 விவசாயிகள் வழங்குகின்றனர். ஆலைக்கு வெட்டிய கரும்புகளை வாகனங்களில் ஏற்றிச் செல்ல செலவினம் பொறுத்தவரை ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது.
தனியார் ஆலைகளுக்கு...
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கரும்பு தனியார் ஆலைகளுக்கு அனுப்புவதை தடுக்க எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், அனுமதி மீறி தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு எடுத்துச் சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
