Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி அருகே கோட்டாட்சியரின் பரிந்துரையின்படி டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

திருத்தணி: திருத்தணி அருகே ஏரிக்கரை பகுதியில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வட்டாட்சியர் பரிந்துரை செய்தும், டாஸ்மாக் நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக கிராமமக்கள் குற்றம் சாட்டினர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி - அரக்கோணம் சாலையில் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளியமமாபுரம் ஏரிப்பகுதியில், கடந்த 5 ஆண்டுகளாக 2 டாஸ்மாக் சில்லரை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த, மதுக்கடைகளுக்கு அருகில் கிராமமக்களுக்கு நீராதாரமாக உள்ள ஏரி, குடியிருப்புகள், கோயில் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. மேலும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை முதல் அரக்கோணம் சாலை வரை புதிய பைபாஸ் சாலைப் பணிகள் முடிந்து, விரைவில் அச்சாலையில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மது கடைகளில் மது வாங்கும் குடிமகன்கள் அங்குள்ள ஏரி, கோயில், பள்ளி, குடியிருப்பு பகுதிகளில் குடித்துவிட்டு மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், கழிவு பொருட்கள் ஆகியவற்றை வீசி செல்வதால், குடிநீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் குடிமகன்கள் தொல்லை அதிகரிப்பால் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, 2 மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய ஏதுவாக ஊராட்சி மன்றம், குடியிருப்போர் நலசங்கம், கோயில் நிர்வாகம் மற்றும் பள்ளி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், திருத்தணி கோட்டாட்சியர், உதவி ஆணையர் (கலால்) ஆகியோருக்கு, பொதுமக்கள் சார்பில் புகார் மனு வழங்கப்பட்டது.

அதன்படி, பொதுமக்கள் மனுவின் மீது விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருத்தணி கோட்டாட்சியர் தீபா உத்தரவின்பேரில், திருத்தணி வட்டாட்சியராக பணியாற்றி வந்த மதன், மதுக்கடைகள் அமைந்துள்ள ஏரிப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மதுக்கடைகள் இடமாற்றம் செய்ய 19.08.2023 அன்று கோட்டாட்சியர் தீபாவுக்கு பரிந்துரை செய்தார். இருப்பினும், இதுவரை மதுக்கடைகள் இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாகவும், விரைவில் திருத்தணியில் புதிய பைபாஸ் சாலை திறக்கப்பட உள்ள நிலையில், குடிமகன்களால் ஏற்படும் வாகன விபத்து, குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரி மாசடைவதை தடுக்கும் வகையில் மதுக்கடைகள் இடமாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திகேயபுரம் ஊராட்சி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.