Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்புத்தூர் அருகே ஆங்கிலேயர் ஆட்சிக்கால எல்லை கல் கண்டுபிடிப்பு

திருப்புத்தூர் : ஆங்கில ஆட்சியின்போது ராமநாதபுரம் மாவட்டத்தையும், புதுக்கோட்டை அரசையும் பிரிக்கும் எல்லைக்கல் ஒன்று திருப்புத்தூர் அருகே நெற்குப்பைக்கும், புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டிக்கும் நடுவே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதர் மண்டிய இடத்தில் காணப்பட்டது.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் நடத்திய கள ஆய்வில் அந்த எல்லைக்கல்லைக் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் அதுபற்றி அவர்கள் தெரிவித்ததாவது, ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னை ராஜதானியில் நிர்வாக பொறுப்பில் உள்ள பல பகுதிகளும் ஏறத்தாழ ஒரே அளவாக இருக்க வேண்டும் என்ற கருத்தின்படி சர் வில்லியம் மேயர் என்ற ஐசிஎஸ் அதிகாரியை 1902ல் அரசாங்கம் நியமித்து அவரிடமிருந்து 1904ல் அறிக்கையைப் பெற்றது. 1910ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்தில் உள்ள இந்திய அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத்தை ஏற்படுத்துவது உட்பட சர் வில்லியம் மேயரின் மாவட்டத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கினார்.

மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிளை அந்த மாவட்டங்களிலிருந்து பிரித்து 1910ம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரில் ஒரு புதிய மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் கோட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி அருப்புக்கோட்டை ஆகிய வட்டங்களும், தேவகோட்டை கோட்டத்தில் திருப்புத்தூர், திருவாடானை, சிவகங்கை, சிவகங்கை ஜமீனைச் சேர்ந்த திருப்புவனம் வட்டங்களும், சாத்தூர் கோட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் வட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

மாவட்டத்தை உருவாக்கும் ஏற்பாடுகளைச் செய்வதற்காகத் தனி அலுவலராக நியமிக்கப்பட்ட ஜே.எஃப். பிரையன்ட், மாவட்டத்தின் முதல் கலெக்டராகவும், மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் நியமிக்கப்பட்டார். புதுக்கோட்டை சமஸ்தானம் 1640ம் ஆண்டு ஆவுடைராயத் தொண்டைமான் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

அதன் பின்னர் ரகுநாத ராய தொண்டைமான்‌ காலத்தில் புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக மாறியது. புதுக்கோட்டை சமஸ்தானம் பல்வேறு காலக்கட்டங்களில் ஆங்கிலேயருக்கு இணக்கமாக இருந்து தன் அரசைப் பாதுகாத்து வந்தது. 1801ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த பாளையங்கள் எல்லாம் ஆங்கில அரசால் ஜமீனாக மாறியபோதும், புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் தனியரசாகவே விளங்கியது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948 மார்ச் மாதம் 3ம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ராஜகோபாலத் தொண்டைமானால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள, நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த இந்த எல்லைக்கல் தற்போதைய புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தின் வேறு பகுதிகளில் காணப்படாத நிலையில், இது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமாகக் கருதப்படுகிறது என்றனர்.