திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(43). ஓவிய ஆசிரியர். இவருக்கும் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (40) என்பவருக்கும் கடந்த 2013ல் திருமணம் நடந்துள்ளது. தம்பதிக்கு 12 மற்றும் 9 வயதில் இரு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், கெளசல்யாவின் தந்தை அருள்மரியனுக்கும் கெளசல்யாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. சொத்தை விற்பனை செய்த பணத்தை தனக்கு கூடுதலாக கொடுக்க வேண்டுமென கெளசல்யா கடந்த ஒரு ஆண்டாக தந்தையிடம் கேட்டு வந்ததாகவும் அவர் தர மறுத்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த கெளசல்யா, கலெக்டர் அலுவலக முகப்பில் திடீரென தீக்குளித்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கெளசல்யாவின் தந்தை அருள்மரியன் உடுமலையில் ஒரு சொத்தை ரூ.40 லட்சத்திற்கு விற்றுள்ளார். அதில் ரூ.10 லட்சம் மட்டும் அவருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கூடுதல் பணம் கேட்டு வந்துள்ளார். அதற்கு அருள்மரியன் தர மறுத்துள்ளார்.
இதனால் கெளசல்யா தீக்குளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் என தெரிவித்தனர். ஆனால், கெளசல்யாவின் சகோதரர் கனகராஜ் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரபாகரன் கெளசல்யாவிடம் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா என அடித்து துன்புறுத்தியுள்ளார். ஏற்கனவே பணம் கொடுத்துள்ளோம். கடந்த 2 ஆண்டுக்கு முன் மீண்டும் பணம் கேட்டு வந்த போது குழந்தைகளின் எதிர்காலம் கருதி என் தங்கை மற்றும் என் தந்தை பெயரில் கூட்டுக்கணக்கு தொடங்கி பணம் செலுத்தினோம். அதிலிருந்து மீண்டும் துன்புறுத்த தொடங்கியுள்ளார். எனவே கெளசல்யாவின் கணவர் பிரபாகரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
 
 
 
   