Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பூரில் புதிய டைடல் பார்க் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்: உடுமலை விழாவில் ரூ.1,132 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கம், ரூ.300 கோடியில் 50,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருப்பூர்: திருப்பூரில் புதிய டைடல் பார்க்கை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார். உடுமலையில் நடக்கும் விழாவில் ரூ.1,132 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கி வைத்து, ரூ.300 கோடியில் 50,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருப்பூர் மாவட்டத்திற்கு நேற்று வந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக இரவு 8.50 மணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு வந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள் மற்றும் நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து இரவு உடுமலையிலேயே தங்கினார்.

இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.182 கோடி மதிப்பில் 35 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.950 கோடியில் 61 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். ரூ.300 கோடி மதிப்பில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் ரூ.40 கோடியில் 7 தளங்களுடன் நவீனமயமாக டைட்டல் நியோ (ஐ.டி.பார்க்) கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உடுமலையில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.இதன் பின்னர் காந்தி சதுக்கம் நேரு வீதியில் உள்ள உடுமலை நகர திமுக அலுவலகத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.

இதையடுத்து மதியம் 12 மணிக்கு பொள்ளாச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு பி.ஏ.பி. திட்டம் உருவாக காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிச்சாமி கவுண்டர், நா.மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து கோவை விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* பாஜவில் டப்பிங் ஆர்டிஸ்ட் வேலைக்கு சேர்ந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் கலாய்

திருப்பூரில் இன்று முதல்வர் தொடங்கி வைக்க உள்ள புதிய டைடல் பார்க்கை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேற்று மாலை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டைடல் பார்க் பணிகள் முழுவதும் முடிவு பெற்றுள்ளது. 60 முதல் 70 சதவீதம் வரை புக்கிங் செய்யப்பட்டுள்ளது. விரைவில் டைடல் பார்க் 100 சதவீதமும் புக்கிங் செய்யப்பட்டு விடும். இதனால், இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் சூழல் உருவாகும். அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது நாட்டிற்கு தேவையான நிதிக்காக வரிகளை விதிக்கிறார்.

நமது பிரதமர் நமது நாட்டின் நலனுக்காக செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் நாம் அனைவரும் ஓர் அணியில் இணைந்து செயல்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. முதல்வரின் திட்டங்களால் மேலும் பொருளாதார வளர்ச்சி தமிழகம் பெறும். மின் கட்டண உயர்வு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சிந்தித்து பேச வேண்டும். அவர் ஆட்சியில் இருந்தபோது செய்ததை மறந்து விடக்கூடாது. ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. அவர் பாஜவில் டப்பிங் ஆர்டிஸ்ட் வேலைக்கு சேர்ந்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.