திருப்பூர்: திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கிய வங்கதேச பெண் உட்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேச நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி வீரபாண்டி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முஷாலி படா (26), நிஷாஅக்தர் (23), எம்டி ரோனி (22) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து, நேற்று கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் தலா 2 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக கவிதா ஆஜரானார்.