Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பூர் ஆயத்த ஆடை துறை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு: ஒன்றிய நிதி அமைச்சரிடம் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் ஆயத்த ஆடைத் துறையை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் ஒன்றிய நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அமெரிக்கா 50% வரி விதித்திருப்பதன் காரணமாக தமிழகத்தில் உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக திருப்பூர் ஆயத்த ஆடைகள் பெரும் பகுதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த 27ம் தேதி முதல் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய சரக்குகள் தேக்கமடைந்தும்,புதிய ஆர்டர்கள் கிடைக்காமலும் இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில்துறையினருடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கலந்துரையாடி கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில், திருப்பூர் சார்பாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணைத்தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் கே.எம்.சுப்பிரமணியம் ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பூரில் ஆயத்த பின்னலாடை துறை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 2024-25 நிதி ஆண்டில் ரூ.44,747 கோடி மதிப்பில் ஏற்றுமதி, உள்நாட்டு வணிகத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்தகம் செய்துள்ளது. இதில் 30 முதல் 35 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று காலத்தில் ஒன்றிய அரசு வழங்கிய சிறப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை தற்போதைய நெருக்கடியில் இருந்து திருப்பூர் தொழில்துறையை பாதுகாக்க வழங்க வேண்டும்.

டியூட்டி டிராபேக் சதவீதம் உயர்த்துதல்,ஏற்றுமதியாளர்கள் வங்கி கடன் திருப்பி செலுத்துவதில் கால அவகாசம், ஏற்றுமதிக்கு சிறப்பு சலுகை,ஏற்றுமதி வாய்ப்புள்ள மற்ற சந்தைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சரிடம் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத் துணைத்தலைவர் சக்திவேல் அமெரிக்க சந்தைக்கான போகஸ் சந்தை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துதல்,வட்டி சமநிலைப்படுத்தும் திட்டத்தை மீட்டமைத்தல், NPA விதிமுறைகளை மறுவகைப்படுத்துவதன் மூலம் 2 ஆண்டு கால அவகாசம் வழங்குதல் மற்றும் அமெரிக்க பருத்தி இறக்குமதியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்திய ஆடைகளுக்கு விலக்கு அளிக்கும் கோரிக்கையை அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்பு ஓரிரு நாட்களில் நல்லதொரு முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.

தொழில்துறையினரிடம் கலந்துரையாடிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கையால் தொழில்துறையில் ஏற்படும் தாக்கம் குறித்து ஒன்றியஅரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தொழிலுக்கு தேவையான வழிகாட்டுதலையும், ஆதரவையும் ஒன்றிய அரசு தொடர்ந்து வழங்கும்.உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் தொடர்ந்து தயக்கமின்றி தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்புடைய அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.