திருப்பூர் :திருப்பூர் காதர் பேட்டையில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மிகவும் பழமையான பள்ளி என்பதால் திருப்பூர் மாநகரின் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பஸ்கள் மூலம் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், 10 மற்றும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விரைவில் வரும் சூழலில் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றதால், மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் பஸ்கள் இன்றி மிகவும் சிரமப்பட்டனர். வீடுகளுக்கு செல்லவே இரவு 8 மணிக்கு மேல் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று காலை மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளனர். அந்த மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு தாமதமாக வந்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது மாணவர்களை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியதாக கூறி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, மாணவர்களை டவுன்ஹால் வளாகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
மேலும், கல்வி அதிகாரி காளிமுத்து மற்றும் போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும், மாணவர்கள் தரப்பில் தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என்பது உள்பட அவர்கள் கூறும் புகார்களை மனுவாக எழுதி அதிகாரிகள் பெற்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,“உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வழக்கமாக ஜனவரி மாதம் முதல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஆனால், தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு முன்னதாகவே இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனை பிடிக்காத சிலர் மாணவர்களை பயன்படுத்தி இதுபோன்ற போராட்டத்தை நடத்தி உள்ளனர்” என்றனர்.
செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு
டவுன்ஹால் பகுதியில் மாணவர்கள் அழைத்துவரப்பட்ட பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. தொடர்ந்து, செய்தியாளர்கள் நீண்ட நேரத்திற்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். போலீசார், செய்தியாளர்களை பணியாற்ற விடாமல் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது செய்தியாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


