*ஹெச்எம்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தவேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் சிவசவுந்திரவல்லி அறிவுறுத்தினார்.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி மீளாய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கி பேசியதாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான காலாண்டு தேர்வு முடிவுகள் அடிப்படையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல், விலங்கியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களை கற்பிக்கும் பாட ஆசிரியர்களில் குறைந்த தேர்ச்சி சதவீதம் வழங்கிய 200 தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது.
மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தேர்ச்சி சதவீதத்தை உற்று நோக்கும்போது தமிழ், கணிதம், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்களில் தான் அதிக மாணவர்கள் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கான காரணங்களை பாடங்கள் வாரியாக, பள்ளிகள் வாரியாக ஆசிரியர்களுக்கு மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக பள்ளிக்கு வராத மாணவர்கள், படிப்பில் ஆர்வம் குறைவானவர்கள், ஆரம்பம் முதலே தக்க வழிகாட்டுதல்கள் வழங்கி தொடர்ச்சியாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதையும், பாடங்களில் படிப்பதில் ஆர்வம் தூண்டும் வகையில், பாடம் சார்ந்த துணைக்கருவிகள், செய்முறை விளக்கங்கள் மற்றும் காணொளிகள் மூலமாக மாணவர்களுக்கு புரியும்படி பாடங்களை விளக்க வேண்டும்.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளில், கூடுதல் கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றம் கொடுத்து அடுத்த மீளாய்வு கூட்டத்தில் தெரிவிக்கவேண்டும்.
வரும் அரையாண்டு தேர்வில் அனைத்து மாணவர்களும் முழுமையாக தேர்ச்சி அடைவதை ஒவ்வொரு பாட ஆசிரியர்களும் உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்.
மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜேஇஇ, நீட், சிஎல்ஏடி, தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் அதிக மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெறுவதை உறுதி செய்தல் வேண்டும். இப்பணிகளை ஆசிரியர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சிவசவுந்திரவல்லி பேசினார்.
இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) சத்திய பிரபா, நேசபிரபா (மெட்ரிக்), உதவி திட்ட அலுவலர் மகேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.