Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி 10 ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரிநீர்

*வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும் மற்ற நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 49 ஏரிகள் உள்ளது.

இந்த ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் அடைப்புகள் இருந்தது. இதனை பருவமழைக்கு முன்கூட்டியே தூர்வார மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனைத்து ஏரிகள் மற்றும் மதகுகள் நீர்பிடி கால்வாய்கள் உள்ளிட்டவற்றை விரைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் தமிழக-ஆந்திர எல்லைப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மாலை அல்லது இரவு முதல் விடியவிடிய கனமழை பெய்தது.

இதன்காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் வேகமாக நிரம்ப தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்தவரை இந்த ஆண்டு அதிகபட்ச மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் மழைக்காரணமாக திருப்பத்தூரில் உள்ள 151 ஏக்கர் பரப்பளவில் உள்ள திருப்பத்தூர் டவுன் பகுதியில் உள்ள பிரதான ஏரியான பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது.

இதேபோல் பொம்மிகுப்பம் ஏரி, சிம்மனபுதூர் ஏரி, குரும்பேரி ஏரி, மாடப்பள்ளி ஏரி, ப.முத்தம்பட்டிஏரி உள்ளிட்ட 10 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த உபரிநீர் கால்வாய் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணைக்கு சென்றுகொண்டிருக்கிறது. தற்போது கரையோர மக்களுக்கு வருவாய் துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நீர்நிலைகளின் அருகே யாரும் செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் 10 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்ட நிலையில் மற்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.