Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்பத்தூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை 5,519 பேர் எழுதினர்

*1,529 பேர் ஆப்சென்ட்: கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2 மற்றும் குரூப்2 ஏ தேர்வில் 1,529 பேர் ஆப்சென்ட் ஆகினர். முன்னதாக தேர்வு மையங்களில் கலெக்டர் சிவசவுந்திரவல்லி ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்2, 2ஏ காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நேற்று நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் தேர்வு எழுதினர்.

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் தேர்வு நடந்தது. இதில் திருப்பத்தூர் வட்டத்தில் 19 தேர்வு மையங்களில் 5,023 தேர்வர்களும், வாணியம்பாடி வட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 2,025 தேர்வர்களும் என மொத்தம் 7,048 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இதற்காக கிராமப்புறம் மற்றும் நகர்புற பகுதிகளிலிருந்து மையங்களுக்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்கு ஏதுவாக திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து காலை 7 மணி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீஅமிர்தா மேல்நிலைப்பள்ளி, கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் நடந்த குரூப் 2 தேர்வை திருப்பத்தூர் கலெக்டர் சிவசவுந்திரவல்லி திடீர் ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக கலெக்டர் கூறுகையில், `டிஎன்பிஎஸ்சி குரூப்2 மற்றும் 2 ஏ தேர்வை கண்காணிப்பதற்காக 8 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும், துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படைகளும், துணை ஆட்சியர் நிலையில் 4 கண்காணிப்பு அலுவலர்களும், மூத்த வருவாய் ஆய்வாளர் நிலையில் 26 ஆய்வு பணியாளர்களும், 28 வீடியோ பதிவாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு தரைதளத்தில் தேர்வு எழுதுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டது. மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவை செய்யப்பட்டது.

விடைத்தாள்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் உரிய பாதுகாப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு கூறினார். இந்த ஆய்வின்போது ஆர்டிஓ வரதராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் 7,048 பேர் விண்ணப்பித்த நிலையில் 5,519 பேர் எழுதினர். 1,529 பேர் ஆப்சென்ட் ஆனதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.