Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி கோயிலில் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மீண்டும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்: சுற்றுலாதுறை அமைச்சர் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டுகளை தொடர்ந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆந்திர மாநில அறநிலைய துறை அமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டியிடம் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையிலிருந்து ஒருநாள் திருப்பதி சுற்றுலா பயணத்தை கடந்த 1974ம் ஆண்டு முதல் அரசு இயக்கி வருகிறது. 1997ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் அழைத்து வரப்படும் பக்தர்களுக்கு விரைவான தரிசனத்திற்கு அனுமதி அளித்து, விரைவு தரிசன டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியது.

தற்போது வரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு தினசரி 400 விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, ஓசூர், கடலூர் மற்றும் பழனி ஆகிய மாவட்டங்களிலிருந்து திருப்பதிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கான பயணம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனைத்து மாநிலங்களுக்கான சுற்றுலா மற்றும் பிற துறைகளுக்கான சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டுகள் வழங்குவதை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

விரைவு தரிசன டிக்கெட்டுகளை ரத்து செய்வது, தமிழ்நாட்டிலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழிபாட்டிற்காக வரும் பக்தர்களை மிகவும் பாதிக்கும். இதுதொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆந்திர அமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டியை நேற்று சந்தித்தார். மீண்டும் திருப்பதி விரைவு தரிசன டிக்கெட்டுகளை பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.