திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை மலைப்பசுவாமி மோகினி அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் பவனி நடைபெறுகிறது. 4ம் நாளான நேற்றிரவு ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து இன்று காலை 5ம் நாள் உற்சவம் மோகினி அலங்கார சேவை கோலாகலமாக நடந்தது. பார்கடலில் மந்திரகிரி என்ற மலையை மத்தாகவும், நாகங்களின் அரசன் வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் கொண்டு தேவர்களும், அசுரர்களும் இணைந்து கடைந்தபோது அமிர்தம் வெளிப்பட்டது. இந்த அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து மீட்டு, தேவர்களுக்கு வழங்குவதற்காக மகாவிஷ்ணு நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரத்தில்) தோன்றினார். இந்த அவதாரத்தை விளக்கும் வகையில் மாயை என்னும் மோகத்தை போக்கும் விதமாக மலையப்பசுவாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
மேலும் மோகினி திருக்கோலத்தில் உள்ள தனது அழகை, மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக தோன்றி ரசிக்கும் வகையில் கிருஷ்ணர் தனி பல்லக்கில் பின்தொடர்ந்து சென்றார்.அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தியுடன், கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் சுவாமி வீதியுலாவின்போது பக்தர்களின் மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கோலாட்டம் போன்றவை நடைபெற்றது.
* கருட சேவை
முக்கிய உற்சவமான கருட சேவை இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் பவனி வரும் மலையப்பசுவாமிக்கு மூலவருக்கு அணிவிக்கப்படும் லட்சுமி ஆரம், மகர கண்டிகை, சங்கு, சக்கரம் உள்பட தங்க, வைர ஆபரணங்கள் அனைத்தும் அணிவிக்கப்படும். பிரம்மோற்சவ சேவைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருட சேவை கருதப்படுகிறது. எனவே கருடசேவை உற்சவத்தை தரிசிக்க நேற்று காலை முதலே பக்தர்கள் திருப்பதிக்கு வந்தவண்ணம் உள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அளவில் உள்ளது. நான்கு மாட வீதி மட்டுமின்றி திருமலையில் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் நிரம்பியுள்ளனர்.
* ஆண்டாள் சூடிய மாலை
திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாள் நடைபெறும் மோகினி அலங்கரத்தின்போது ஏழுமலையான் மற்றும் மலையப்பசுவாமிக்கு தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டுவஸ்திரம் அணிவிப்பது வழக்கம். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பட்டுவஸ்திரம் ஆகியவை நேற்று மாலை திருமலைக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்டது. இந்த பூ மாலைகள் மற்றும் கிளி ஆகியவை இன்று காலை ஏழுமலையானுக்கும், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கும் அணிவிக்கப்பட்டது. பட்டு வஸ்திரம் மூலவர் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.