திருப்பதி பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான இன்று சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான இன்றுகாலை மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில், மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க கொடி மரத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட பிரம்மோற்சவ கொடி, வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவை நேற்றிரவு நடந்தது. பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகள் நான்கு மாடவீதிகளில் பவனி வந்தனர். அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கத்துடன் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமலை பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி கோயிலுக்கு கொண்டு சென்று ஏழுமலையானுக்கு சமர்பித்தார். பின்னர் சுவாமி தரிசனம் செய்தார். ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான காலண்டர் மற்றும் டைரிகளை வெளியிட்டார்.
பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி கையில் தாமரை மலருடன் ஜனார்த்தன அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவின்போது இந்து தர்ம பிரசார பர்ஷித், அன்னமாச்சார்யா, தசா சகீத்திய திட்டத்தின் சார்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் பல்வேறு வகையான நடனமாடியும், பஜனைகள் செய்தும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடியும், மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இன்றிரவு உற்சவத்தில் மலையப்பசுவாமி கைகளில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி நடைபெறுகிறது. அனைத்து கலைகளையும் அருளும் சரஸ்வதிதேவி தன்னுடைய ரூபமென கூறும் வகையிலும், அன்னப்பறவை பாலை தனியாகவும், தண்ணீரை தனியாக பிரிப்பதுபோல் மனிதர்களில் பாவம் செய்தவர்களையும், புண்ணியம் செய்தவர்களையும் தனித்தனியாக பிரித்து அருள்புரியும் காட்சியாக இந்த உற்சவம் நடைபெறுகிறது.