திருப்பதியில் நாளை கொடியேற்றம் பிரமோற்சவத்துக்கு தினமும் 8 லட்சம் லட்டுகள் உற்பத்தி: பக்தர்களுக்கு தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை
திருமலை: திருப்பதியில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரமோற்சவத்துக்கு தினமும் பக்தர்களுக்கு தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் 8 லட்சம் லட்டுகள் உற்பத்தி செய்யப்படுவதாக தேவஸ்தான செயல் அலுவலர் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று அங்குரார்பணத்துடன் தொடங்கி நாளை கொடியேற்றம் நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தில் தினந்தோறும் காலை மற்றும் இரவில் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். இதனை காணவரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
இதுகுறித்து தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிரமோற்சவத்தில் 9 நாட்களில் மூலவரை 6 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோன்று இந்த ஆண்டு பிரமோற்சவம் நடைபெறும் காலங்களில் நாள்தோறும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை மூலவரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நான்கு மாடவீதிகளில் கேளரிகளில் 2 லட்சம் பக்தர்களுக்கும், அதனை சுற்றி நான்கு மாட வீதிகளில் சிறப்பு வரிசை அமைத்து சுமார் 45 நிமிடங்களில் வரிசை வழியாக வாகன சேவை காண ஏற்பாடு செய்யப்படுகிறது. இதுதவிர திருமலையில் மற்ற இடங்களில் உள்ள பக்தர்களுக்காக 35 இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. லட்டு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், நாள்தோறும் 8 லட்சம் லட்டுகள் உற்பத்தி செய்து தட்டுப்பாடு இல்லாமல் பக்தர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.