திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியொட்டி உக்ர சீனிவாசமூர்த்தி நான்கு மாட வீதிகளில் நேற்று காலை பவனி வந்தார். ஆடி மாதத்தில் வரும் ஆஷாட சுக்ல ஏகாதசி நாளில் விஷ்ணு பகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். ஐப்பசி மாதம் கைசிக துவாதசி நாளில் அவரை துயில் எழுப்புவது வழக்கம் என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையொட்டி கலியுக தெய்வமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கைசிக துவாதசி நாளில் ஒருநாள் மட்டும் சூரிய உதயத்திற்கு முன், வெங்கடதுரைவர், ஸ்னப்னபேரா எனவும் அழைக்கப்படும் உக்ர சீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கோயிலுக்கு வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அதன்படி கைசிக துவாதசியான நேற்று அதிகாலை 4.30 மணி முதல் 5.45 மணி வரை சூரிய உதயத்திற்கு முன், ஸ்ரீதேவி பூதேவியுடன் உக்ர சீனிவாசமூர்த்தி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோயிலுக்குள் கைசிக துவாதசி ஆஸ்தானம் செய்யப்பட்டது. இதில் கோயில் ஜீயர் சாமிகள், செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.
* சூரிய உதயத்திற்கு முன் ஏன்?
14ம் நூற்றாண்டில், உக்ர சீனிவாச மூர்த்தி ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, சூரியனின் கதிர்கள் உற்சவர் மீது விழுந்து நெருப்பு மூண்டது. அப்போதிலிருந்து, சூரிய உதயத்திற்கு முன் ஏழுமலையான் கோயிலில் உக்ர சீனிவாச மூர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
