திருமலை: இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான பல்வேறு தரிசன சேவைகள் மற்றும் அறை ஒதுக்கீடு தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதில் சுப்ரபாதம், தோல்மாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவைக்கு வரும் 18ம் தேதி(நாளை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் குலுக்கல் பதிவு தொடங்கி, 20ம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.
பின்னர் நவம்பர் 20ம் தேதி 12 மணிக்கு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரமோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை மற்றும் வருடாந்திர தெப்போற்சவம் ஆகியவற்றுக்கான டிக்கெட்கள் நவம்பர் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதேசேவைக்கு நேரடியாக சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும் விர்சுவல் சேவைக்கு 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கபிரதட்சனம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் 24ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி ரூ.500 வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளை பெற 24ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வரும் 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.


