திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெய்யில் கலப்படம் செய்த விவகாரத்தில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவரின் உதவியாளரை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதங்கள் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்துவதற்காக 6 மாதங்களுக்கு 1700 முதல் 2000 டன் நெய் தேவைப்படுகிறது. இவை டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது அறங்காவலர் குழு முடிவின்படி தமிழ்நாடு திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரியிடம் டெண்டர் கோரப்பட்டு நெய் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திடம் தேவஸ்தானத்திற்கு தேவையான அளவிற்கு நெய் உற்பத்தி செய்து டெலிவரி செய்வதற்கான உரிய வசதிகள் இல்லாவிட்டாலும் அவர்கள் டெண்டர் பெற்றனர்.
அதன்பிறகு காளஹஸ்தியில் உள்ள வைஷ்ணவி டெய்ரி மூலம் உத்தரகாண்டில் உள்ள போலோ பாபா டெய்ரி நிறுவனத்திடன் இருந்து நெய் வாங்கி தேவஸ்தானத்திற்கு கடந்த 2024 ஆண்டு மே, ஜூன் மாதங்களில் சப்ளை செய்தனர். அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றார். அதனை தொடர்ந்து தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக சியாமளாராவ் நியமிக்கப்பட்டார். சியாமளா ராவ் பதவியேற்ற பின்னர் தேவஸ்தானம் கொள்முதல் செய்த நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் அந்த நெய் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. சோதனை முடிவில் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநில அரசு இதுகுறித்து விசாரணை செய்ய சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது.
ஆனால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நெய் கலப்பட விவகாரத்தில் சிபிஐ இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. சிபிஐ இணை இயக்குனர் வீரேஷ்பிரபு தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஏஆர் டெய்ரியின் நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன், போலே பாபா டெய்ரியின் முன்னாள் இயக்குநர்கள் பிபின்ஜெயின், பொமில் ஜெயின், வைஷ்ணவி டெய்ரியின் சி.இ.ஓ. அபூர்வா வினய் காந்த் சாவ்டா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான ஒய்.வி.சுப்பாரெட்டியின் உதவியாளராக கடந்த 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பணி புரிந்த அப்பண்ணாவுக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் (எஸ்.ஐ.டி) நேற்றிரவு அப்பண்ணாவை கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லூர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அவரை நெல்லூர் சிறையில் அடைத்தனர். நெய் கலப்பட வழக்கில் அரசியல் பின்புலத்தில் உள்ள முதல் நபராக அப்பண்ணா கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
